Mail This Page

திருமதி கீதா தன் ஆன்மிக அனுபவத்தைச் சொல்கிறார்.


என்னுடைய சகோதரியும், அவர் கணவரும், 1994ம் ஆண்டு, செப்டம்பர் 9ம் தேதி விஸ்கான்ஸினிலிருந்து, நியுயார்க்கிலுள்ள எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் இருவருமாக வருவது இது முதல் தடவையே. அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. என் சகோதரியின் பேச்சைக் கேட்க மிக ஆவலாக இருக்கும். அவள் பேச்சில் மிகவும் ஈர்க்கப் பட்டு, அவள் பேசுவதைக் கேட்க மிகவும் ஆவலோடு காத்திருப்பேன். அவள் பேசும்போதெல்லாம், “பேசுவது நானில்லை; என் குருநாதர் தான்” என்பாள். அப்போது அதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. பல விதத்தில் எனக்கு மனக் குழப்பம் அதிகமாக இருந்த நேரம் அது. அவள் தினமும் காலையில் எழுந்து தன்னுடன் தியானம் செய் என்று சொல்லுவாள். எப்படி தியானம் செய்வது என்பதை சொல்ல முடியாத அந்த நிலையில், நான் கண்களை மூடிக்கொண்டு கடவுளை தியானம் செய்ய ஆரம்பித்தேன். நான் மிகவும் சிரத்தையுடன் காலையில் எழுந்து தியானம் செய்து வருவதைக் கண்டு அவளுக்கு மிகவும் சந்தோஷம். மாலையிலும் அவர்களுடன் சேர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். எனக்கும் மனதில் ஒரு நிம்மதி.

நாகம் மகுடிக்கு மயங்குவது போல நான் அவள் பேச்சில் மயங்கினேன். எனக்கு அவ்வளவாக பாட வராவிட்டாலும் சங்கீதத்தை ரசிக்கும் பாவம் மிகவும் உண்டு. அவளும் மிக நன்றாகப் பாடுவாள். அவள் அனுபவத்தில் கிடைத்த பாடல்களை ரசித்துப் பாடும்பொழுது, நான் இந்த உலகத்திலேயே இல்லை. அந்த அனுபவமே தனிதான். அவள் நிறைய கிருத்துவப் பாடல்களை கர்னாடக சங்கீதத்தில் மெட்டமைத்துப் பாடி, சொல்லியும் கொடுத்தாள். அந்த ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாது. என் கணவர் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்- கடவுளைத் தவிர. ஆனால் நான் தினமும் காலையில் எழுந்து தவறாமல் தியானம் செய்வது கண்டு அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது, குறைந்த பட்சம் இந்த அனுபவம் என்ன என்றாவது தெரிந்து கொள்வதற்கு. இவரை எவ்வளவோ துருவித் துருவிக் கேட்டுப் பார்த்தும் பலனில்லை.

கொஞ்ச நாள் கழித்து என் சகோதரியின் கணவர் இவரிடம் எங்கள் குருநாதரின் சிறு வயது புகைப்படம் ஒன்றைக் காட்டினார். மறு நாள் இவர் என் சகோதரியுடன் பேசும்போது, “அவரைப் (எங்கள் குருநாதரை) பார்த்தால், சிறு வயதில் நான் எங்கள் தாத்தா வீட்டில் பார்த்த ராமர் மாதிரி இருக்கிறது” என்றார். என்னுடைய சகோதரி உடனே புரிந்துகொண்டுவிட்டாள். அப்போதிருந்து இவர், ‘எனக்கு (initiation) தீட்சை கிடைத்தால் நன்றாயிருக்கும்’ என்று தினமும் புலம்ப ஆரம்பித்துவிட்டார். அதற்கு, என் சகோதரி, “குருநாதரிடமிருந்து உத்தரவு கிடைத்தால் தான் எதுவும் செய்ய முடியும். அவர் எந்த நாளை சொன்னாலும் தவறாது வந்துவிடத் தயாராக இருக்க வேண்டும்” என்றும் சொன்னாள். என் மனதில், ‘இவரும் தியானம் செய்யத் தொடங்கிவிட்டால், இருவருக்கும் ஒரே விதமான அனுபவங்கள் கிடைக்குமே’ என்ற ஆதங்கம். கடவுளிடம் தினமும், எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ இல்லையோ, என் கணவருக்கு அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். ஏனெனில், எனக்கு தீட்சை கிடைப்பதற்கு முன்பே, என் குருநாதரின் மேல் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அது கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து தியானம் செய்ய உத்தேசித்திருந்தேன்.

இந்த நிலை இவ்வாறே சில நாட்களுக்குத் தொடர்ந்தது. இவருக்கு, இவர்கள் பேசும் போது, தன்னையும் அந்த சம்பாஷணையில் கலந்துகொள்ள விடவில்லையே என்ற ஏக்கம். திடீரென ஒரு நாள், நானும் என் சகோதரியும் ஒரு தனி அறையில் பேசிக் கொண்டிருந்த போது, இவர் வந்து, “இன்று உங்களிடம் கட்டாயம் பேசியே தீரவேண்டும். சில கேள்விகளுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்” என்று என் சகோதரியை வற்புறுத்தினார். அவருக்கு குருநாதரின் அருள் கிடைக்கும் நேரம் வந்துவிட்டதாலோ என்னவோ, என் சகோதரியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், உடனே பேச முற்பட்டாள். இவர், ‘பேசுவதை ஒலி நாடாவில் பதிவு செய்து வைத்துக் கொள்வேன்’ என்று டேப் ரெக்கார்டரையும் எடுத்து வைத்துக் கொண்டார். அவர் தன் வசம் இல்லை. மிகவும்(excited) உணர்ச்சிவசப் பட்டிருந்தார். இதற்கு முன் இவர் இப்படி இருந்ததில்லை. தான் தன் வசம் இல்லை என்பதையும், தனக்குள் இருந்து யாரோ தன்னை இயக்குவது போல் உணர்வதாகவும் புலம்ப ஆரம்பித்தார். என் சகோதரிக்கு நிலைமை புரிந்துவிட்டது. குருநாதர் தான் அவர் மூலமாக அந்தக் காரியத்தை செய்யத் தூண்டுவதாக அறிந்து பேச ஆரம்பித்தாள். இருவரும் பேசிய சம்பாஷணையை பதிவு செய்து வைத்தார்.

பிறகு இருவரும், மஹேஷ் தன் குடும்பத்துடன் இவர்களைப் பார்ப்பதற் கென்றே என்னுடைய niece வீட்டிற்கு வருவதனால், செப்டம்பர் நடுவில் புறப்பட்டுப் போனார்கள். இவர்களுடைய வருகை எங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல திருப்பம். கிடைத்தற்கரிய குரு நாதரின் அருளும், அவருடைய வழிகாட்டுதலும் கிடைக்கப் பெற்றோம். அவர்கள் விஸ்கான்ஸினில் இருந்தாலும், தினமும் தொலைபேசி மூலம் எங்கள் சம்பாஷணை தொடர்ந்து கொண்டுதானிருந்தது. குருநாதரிடம் சொல்லி எங்களுக்கு தீட்சை பற்றி கேட்கச் சொல்லியிருந்தேன். அவளும் ஷோபனாவிடம் சொல்லி குருநாதரிடம் சொல்லி அவர் பதிலை கேட்டு சொல்லச் சொல்லியிருந்தாள். எங்கள் நேரமும் அதிர்ஷ்டமும் ஒன்று கூடியதால் சம்மதமும் தீட்சைக்கான தேதியும் வந்தது. இருவருக்கும் சேர்ந்து இனிஷியேஷன் நடக்கப் போகிறது என்பதால் கரை காணாத இன்பம், பேரானந்தம் இருவருக்கும். ஆனால் தீட்சைக்கான நாள் டிசம்பர் 24 என்பதால் ஒரு குழப்பமும் உடன் வந்தது. மூன்று டிக்கட் வாங்க வேண்டும். அதுவும் கிருஸ்துமஸ் பண்டிகைக் காலமானதால், குறைந்த கட்டண டிக்கட் கிடைக்காதே என்ற கவலை. என்ன தான் குருநாதர் மேல் நம்பிக்கை இருந்தாலும், ‘இது நடக்குமா? போவோமா?’ என்றெல்லாம் கவலை மனதை வாட்டியது. குருநாதர் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது தெரியாத நிலை அன்று. கடைசியில், அவர், நான், நிது மூவரும் பிள்ளைகளை இங்கேயே விட்டு விட்டு விஸ்கன்ஸின் போனோம். வாழ்க்கையிலேயே அந்த மூன்று நாட்கள் எல்லோரும் தியானம் செய்தது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. எந்நேரமும் தியானத்தைப் பற்றியும், குருநாதரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் தான் பேச்சு. காலம் மாறாமல் அந்த நாட்களே என்றென்றும் நிலைத்து விட்டால் என்ன என்று எண்ணத் தூண்டும் அளவிற்கு மகிழ்ச்சிகரமான நாட்கள் அவை.

டிசம்பர் 24ம் தேதி காலை 6 மணிக்கு என் சகோதரி எங்கள் இருவருக்கும் இனிஷியேஷன் செய்து வைத்தாள். அன்று மாலை குருநாதரை (தொலைபேசியில்) கூப்பிட்டுப் பேசினோம். அப்போது நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அறிவிலித்தனம் தான். ஏனென்றால், அவர் தானே என்னைத் தேடிவந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர் அறியாதது ஒன்றுமில்லை இவ்வுலகில். இருந்தாலும் என் அறியாமையினால் அவ்வாறு செய்தேன். பிறகு அவரிடம் நான் தியானம் செய்யும் பொழுது, கவனம் தியானத்தில் இருப்பதைவிட, அவரைக் காணவேண்டும் என்ற எண்ணமே மிகுதியாக இருப்பதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, “இன்று நான் அங்கே வருகிறேனம்மா” என்று பதில் அளித்தார். அப்பொழுதும் என் அறியாமை தான் மேலோங்கியது. ஏனெனில், அதுவும் என்னுடைய எண்ணமே. அவர் என் மனத்தில் இருப்பதையும் இல்லாததையும் அறிந்தவர். அதனால் தான் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளே பதில் தந்துவிட்டார். மனதோ இறக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருந்தது, ‘எப்போது அந்நேரம் வரும், அவரை நான் பார்க்கப் போகிறேன்’ என்று. அந்த நேரமும் வந்தது. அன்று இரவு நான், இவர், சகோதரி, அத்திம்பேர், சின்னி, அவள் கணவர் ரங்கராஜன் அறுவரும் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தோம்.

எல்லோரும் முடித்து எழுந்து விட்டார்கள். யாரும் அந்த அறையில் இல்லை என்று நான் அறியவில்லை. திடீரென்று எனக்குள் அழ ஆரம்பித்தேன், ‘ஏன் எனக்கு தரிசனம் தரவில்லை’ என்று. வழக்கம் போல எல்லாரும் செய்வது மாதிரி என்னை நானே நொந்து கொண்டேன். ‘நான் தான் தியானம் சரிவர செய்யவில்லையோ’ என்றும், ‘நான் ஒரு அதிர்ஷ்டமில்லாதவள்’ என்றும் , இவ்வாறு நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே பளிச் சென்று ஒரு பேரொளி. யாராவது படம் எடுக்கிறார்களா? விளக்குகள் போட்டு படம் பிடிக்கிறார்களோ என்று சந்தேகம். கண்ணை ஒரு முறை திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குலுங்கக் குலுங்க அழ ஆரம்பித்தேன். என் குருநாதர் ஒளி வடிவில் காட்சிக் கொடுத்ததைக் கூட அறியாத பேதமை. பிறகு என் சகோதரியும், niece ம் வந்து ஆறுதல் சொல்ல, நான் நடந்ததைச் சொல்ல, உடனே அவர்கள் சொன்னார்கள், “குருநாதர் உனக்கு ஒளி ரூபமாக தரிசனம் தந்திருக்கிறார்” என்று. இதைக் கேட்டதும் ஒரு புத்துணர்ச்சி. எந்த செயலும் அவனின்றி நடப்பதில்லை. அப்பொழுது தான் மனிதர்களுடைய கோபமும், பொறுமையின்மையும், அவசரத்தனமும் அறியாமையினாலேயே என்று தெரிந்து கொண்டேன்.

மறு நாள் காலை ஒரு அதிசய அனுபவம். காலையில் எல்லோரும் தியானம் செய்துகொண்டிருக்கும் போது, நான் முதலில் முடித்துவிட்டு அவர்கள் வீட்டில் வைத்திருந்த ஒரு படத்தைப் பார்த்து, ‘அப்பனே என்றும் எப்பொழுதும் நல்லதையே செய்து, நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, சத்ய தர்மப்படி வாழ்க்கையை நடத்தி, நற்கதியடைய நீயே அருள் புரியவேண்டும்’ என்று சொல்லி முடிப்பதற்குள் வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் niece ம் தியானம் முடித்து எழுந்து விட்டதால், “வாசலில் யாரென்று பார்” என்று சொன்னேன். போய்ப் பார்த்த போது யாரையும் காணோம். எனக்குப் புரிந்தது, நான் நினைத்ததை ஆமோதிப்பதற்காக இப்படிச் செய்திருப்பார் என்று. கடவுளை நம்பினார் கை விடப்படார் என்பது போல, நம்பினோர்க்கு இல்லை என்பதே இல்லை. இந்த உலகில் அத்தனை கருணை உள்ளம் படைத்தவர் எங்கள் குருநாதர். இதற்கு முன் நடந்த அனுபவம் ஒன்றைச் சொல்லவேண்டும். இனிஷியேஷன் நடப்பதற்கு முன் தியானம் செய்ய ஆரம்பித்த புதிதில் அவரைக் காண வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப இருக்கும். அவரைப் பற்றி கற்பனை செய்யாத நாளே இல்லை. ஏனெனில், அவர் எப்படி இருப்பார் என்பதே எனக்குத் தெரியாது. அவர் ஒரு டாக்டர் என்பதும், MS முடித்து, அரசாங்க மருத்துவமனையில் வேலை செய்கிறார் என்பதும், அவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்றும் அறிந்திருக்கிறேன். Sports medicine, Acupunctureஆகியனவும் படித்திருக்கிறார் என்பது வரை தெரியும். என்னுடைய சகோதரி மற்றும் எல்லா சீடர்களும், அவரை மனதில் குருநாதர் என்று நினைத்தாலும், அவரை அழைப்பதென்னவோ, “டாக்டர்” என்றுதான். என்னுடைய மனதில் ஈசன் வைத்தியனாதனைத்தான் நினைத்தேன். என்னவோ அவரை முதலில் இருந்தே டாக்டர் என்று அழைக்க முடியவில்லை. என்றுமே அவரை அப்பனே குருநாதா என்று தான் அழைப்பேன். நாள் போகப் போக அவர் எனக்கு தாய், தந்தை, ஈசன், ஆசான் என்று உணர்ந்தாலும் அவரை எனக்கு தந்தையாகவே உணர ஆரம்பித்தேன்.

ஒரு நாள் படுத்த போது இந்த கேள்வியே என் மனதை குடைய ஆரம்பித்தது. ‘நான் அவரை அப்பா என்று அழைப்பது சரியாகுமா’ என்று. ஏனென்றால் அவர் குருநாதராக இருந்தாலும் வயதில் பெரியவராக இல்லை. அதாவது, நான் அப்பா என்று கூப்பிடுமளவு அவருக்கு வயதில்லை. ஏனென்றால், நானும் வயதானவள். ஆகையால் வெகு நேர தர்க்கத்துக்குப் பிறகு என் சகோதரி சொன்னது ‘ஆத்மாவிற்கு வயதில்லை’ என்பது நினைவிற்கு வந்தது. உடனே அவரை நான் அப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தேன். இது இவ்வாறிருக்க, நாங்கள் விஸ்கான்ஸனில் இருந்த போது, என் மாமனாருக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக செய்தி வந்தது. மிகப்பெரிய ஆனந்த கடலில் சிறு கலக்கம். இங்கு வந்து சேர்ந்து கொஞ்சம் தேவலை என்றதனால் எதற்கும் போய்ப் பார்த்து வர சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு போன் செய்தார். அந்த சமயம் ஹாலிடே சீசன் என்பதால் அதற்குள் திடீர் திருப்பம் ஏற்பட்டு, என் மாமனாரும் காலமாகிவிட்டார். டிக்கட் கிடைக்காததால், கடைசிவரை சிங்கப்பூர் போக முடியாமல் என் கணவரும் அவருடைய சகோதரரும் சென்னை சென்று, காரியங்களைச் செய்ய ஏற்பாடு செய்து இவரும் சென்னை கிளம்பிப் போனார்.

அங்கு போன காரியம் துக்ககரமானதாக இருந்தாலும், குருநாதரை முதன் முதலில் சந்திக்க போகிறோமே என்று என் கணவருக்கு மிகுந்த ஆவல். பார்க்கப் போவது என் கணவராக இருந்தாலும், இவராவது அவரை பார்க்க முடிந்ததே என்று இரட்டிப்புச் சந்தோஷம் எனக்கு. இவர் போவதற்கு முன் 4 கேள்விகள் குருநாதரை கேட்கச் சொல்லி எழுதிக் கொடுத்தேன். இப்போ அவரை மணி என்பவருடன் சேர்ந்து சென்று பார்த்தார். பார்த்த பின் வாயில் வார்த்தையே எழவில்லை. எவ்வளவோ ப்ரம்மாண்டமாக அவரைப்பற்றியும், அவருடைய செயல்களை பற்றியும் கேட்டுவிட்டு, அங்கு பார்ப்பதோ ஒரு எளிய மனிதரை. அப்போது தான் அவர் உணர்ந்தார், ‘தெய்வம் தன்னை பறை சாற்றிக் கொள்வதில்லை’ என்று. அவரைப் பார்த்துவிட்டு, நிராசையோடு வெளியில் வந்தபோது, இவரை மீண்டும் உள்ளே அழைத்து, அவருக்கு சாப்பிடக் கொடுத்து பேச ஆரம்பித்திருக்கிறார். குருநாதரைப் பற்றி சகோதரியிடம் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன், யாருடனும் ரொம்ப பேசமாட்டார் என்று.

ஆனால் இவர் சென்ற சமயம், எங்களுடைய அதிர்ஷ்டம், பேசிக் கொண்டே இவரைப் பார்த்து கேள்விகள் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கச் சொல்ல; ஆனால் இவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாததினால் வாயே திறக்கவில்லை. அதற்கு அவர், “உன்னுடைய டைரியில் எழுதியிருக்கிறாயே, அதைக் கொடு. நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று அதை வாங்கி ஒரு பார்வை பார்த்திருக்கிறார். கேள்விகள் அந்த டைரியில் இருக்கிறதென்பது தெரிந்தவருக்கு, அதைப் படிக்கவா வேண்டும்? எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே! இருந்தாலும் மாயக்கண்ணனல்லவா எங்கள் குருநாதர்! விந்தைகள் செய்திடினும், பார்ப்பவர்களுக்கு விந்தையாக வைக்காமல், விந்தையே உருவாக நிற்கும் எங்கள் குருநாதனின் விந்தையை என்னென்பது! பிறகு அந்தக் கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு, திரும்பக் கொடுத்துவிட்டார்.

அவர்(கணவர்) சில நேரம் அவருடன் பேசிய பிறகு கிளம்பும் தருணம் ஏதோ காகிதம் தேடுவது போல செய்து அவரிடமிருந்து டைரியை வாங்கி, அதில் எனக்காக ஒரு சிறிய அன்பான விளக்கம் கொடுத்தனுப்பினார் என்னுடைய அறியாமைத்தனமான கேள்விக்கு. இவர் காரியங்கள் முடித்துவிட்டு, இங்கு நியூயார்க் திரும்பியவுடன் அந்த டைரியை என்னிடம் கொடுத்தார் படிப்பதற்கு. அந்த டைரியை படித்தவுடன் நான் இந்த உலகத்திலேயே இல்லை. எத்தனையோ ஜென்மங்களாகப் பிரிந்த தகப்பனை நேரில் பார்த்தது போல ஒரு பேரின்பம். அப்பொழுதும் என் அறியாமைதான். அவர் எந்நேரமும் என்னுடன் இருந்து கொண்டிருந்திருக்கிறார், நான் தான் அதை உணரவில்லை. இன்னமும் அவர் கைப்பட எழுதிய வாசகங்களை என் மனம் எப்போதும் அசைபோட்டுக்கொண்டே இருக்கிறது. நெஞ்சில் ஆணித்தரமாக பதிந்திருக்கிறது. என்ன பாக்கியம் செய்தேனோ, இப்படி ஆண்டவனே தன் கைப்பட எழுதியதைப் பெற! அந்த டைரியை என்றென்றும் போற்றிப் பாதுகாத்திருப்பேன்.


கீதா