Mail This Page

டாக்டரின் சீடர்களில் ஒருவரான முத்துக்குமார்,சமீபத்தில் தனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.


வணக்கம

என் அனுபவத்தை என்னென்று சொல்வது! என் குரு என்னை பார்க்க வந்தார் என்று எழுதுவதா அல்லது நான் அவரை பார்க்குமாறு என் எதிரில் வந்து நின்றார் என்பதா! நான் இதை விளக்கி எழுத அவர் எனக்கு உறு துணை யாக இருக்க வேண்டும். இந்த அனுபவத்தை நான் எழுதுமாறு அருளிய என் குரு டாக்டர் நித்யானந்தத்துக்கு, ஆயிரம் கோடி நமஸ்காரத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

our master குறிப்பிட்ட தேதிகளில் நான் தாமரைக்குச் சென்று த்யானம் செய்வது வழக்கம். 24-12-2008 அன்றும் அதற்குத்தான் கிளம்பினேன். வழக்கமான் வழியில் அன்று ஏனோ செல்லவில்லை. டாக்டர் என்னை வேறு வழியில் அழைத்தார் போலும். மாறிய பாதையில் காரை ஓட்டியபடி போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று என் எதிரில் டாக்டர்! எண்ணங்கள் நின்றுபோய் வியப்பிலும் அதிர்ச்சியிலும் உறைந்தேன். அடி வயிற்றில் பகீரென்றது- ஜயண்ட் வீலில் மேலிருந்து சரியும் இறக்கம் போல! அதற்குமேல் காரை ஓட்ட முடியவில்லை. நிறுத்திவிட்டு அவரை நோக்கி ஓடினேன். 13 வருடங்களுக்குப்பிறகுபட்டப் பகலில், பழைய உருவத்தில், நான் பார்த்த என் டாக்டர் என்னை பார்க்காததுபோல் வேறு புறம் திரும்பி நின்றிருந்தார். டாக்டர் என கூப்பிட் நினைத்தேன். நா எழவில்லை. தொடு தூரத்தில் போய் நின்றேன். அவரை கண்களால் பருகினேன். வானை நோக்கியவாறு இருந்தார். பிறகு பூமியை பார்த்தவாறு சாலையை கடக்கலானார். நானும் பதைக்கப் பதைக்கப் பின்னால் சென்றேன். இருவரும் ஒன்றாக சாலையைக் கடந்தோம். சாலையைக் கடந்ததும் எதிரில் இருந்த ஒரு கடை அருகில் நின்று ஓரிரு நிமிடங்கள் அந்த கடையையே பார்த்தபடி நின்றார். நானும் நின்றேன். எல்லாமே அனிச்சைச் செயல். திடீரென்று ஒரு மின்னல். அதுவரை என்னை நேருக்கு நேர் பார்க்காதவர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு, பின் மீண்டும் தலை குனிந்தபடி நடக்கலானார். அவர் அருகிலேயே இருந்தும், என் நமஸ்காரத்தை தெரிவிக்க என்னால் இயலவில்லை. சப்த நாடிகளும் ஒடுங்கி கண் சிமிட்டவும் மறந்து வாயடைத்துப் போனேன். அவர் நடந்தார். அவர் நடக்க நட்க்க அவர் பாதம் பட்ட இடத்தில் நானும் அடிவைத்துப் பின் தொடர்ந்தேன்.

ஒரு மின்சாரப் பெட்டி. அதன் அருகில் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தை கிளப்பியபடி ஒருவர். அவர் நகரும்வரை டாக்டர் நின்றார்.நானும்தான். அவர் நடையைத் தொடர்ந்தார். நானும். நினைவழிந்த நிலையில் இருந்த என் மனம் டாக்டர் டாக்டர் என்று அரற்றியது. ஒரேகதியில் தென்றலைப்போல் ஒய்யாரமாக் அவர் நடக்க என்வசமில்லாத நானும் தொடர்ந்தேன். அவர் தனது வலது கையில் வைத்திருந்த சில காகிதங்களுடனான நீல நிற ஃபைலை தன் இடது கைக்கு மாற்றிக் கொண்டார். பிறகு தன் வலது கை ஆட்காட்டி விரலை முன் நோக்கிக் காட்டியவாறு தொடர்ந்து வா என்பது போல் நடந்தார். தொடர்ந்துதான் சென்று கொண்டிருந்தேன். ஏன் அவர் என்னுடன் பேசவில்லை? இப்போது காணாமல் போயிருந்த என் மனம் மீண்டது. “நான், முத்துக் குமார், டாக்டர். ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள் டாக்டர்?” ம்ஹும்! மனத்தில் ஊற்றெடுத்த சொற்களை பேச முடியவில்லை. கேள்வி ஒரு புறம். பதற்றம் ஒரு புறம். அவருடன் பேச எனக்குப் பக்குவம் இல்லையோ என்ற பரிதவிப்பு ஒரு புறம். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பார்த்த அவரை இன்றும் விட்டுவிட்டால், இன்னும் எத்தனை நாட்களோ என்ற பயம் ஒரு புறம். தவித்தேன்.

மனம் தான் விழித்துக்கொண்டுவிட்டதே. பூட்டாமல் விட்டு வந்த காரை எடுத்துக்கொண்டு வந்து டாக்டரை அழைத்துப் போகலாம் என்று தோன்ற காரை நோக்கி விரைந்தேன், டாக்டரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி. டாக்டர் நடந்து சென்று கொண்டுதான் இருந்தார். வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பி வரும்போதும் டாக்டர் நடந்துகொண்டிருந்தார். சிக்னலுக்கு முன் இடது பக்கம் திரும்பினார். சிக்னல் விழுந்ததால் நான் வலது புறம் திரும்பி வண்டியை நிறுத்தவேண்டியதாயிற்று. திரும்பிப் பார்த்தேன். டாக்டரைக் காணோம்.

அவரை எங்கு சென்று தேடுவது? அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த வேலை காத்திருந்தது. சாந்தம்மாவை அழைத்துக்கொண்டு தாமரைக்குச் சென்று த்யானம் செய்யவேண்டுமே. டாக்டர், ஒவ்வொருவருடைய உள்ளத்தில் மட்டும் இல்லாமல் வெளியிலும் நிழலாக தொடர்கிறார் என்பதை எனக்கு இந்த அனுபவம், உறுதியாக்கியது.

அவர் தோற்றம் எப்படி இருந்தது என்பதைச் சொல்லவில்லையே!

முன்பிருந்ததைவிட சற்று பூசினாற்போல உடல் வாகு. எப்போதும் போல சஃபாரி உடை, சாம்பல் நிறத்தில்; பாக்கெட்டில் இரண்டு பேனா; சாதாரண காலணி; முன்னைவிட நரைத்து குறைந்துபோன முடி. புதிதாக வெள்ளை அரும்பு மீசை! மூக்குக்குப் பொருத்தமான மீசையா, மீசைக்குப் பொருத்தமான மூக்கா! வயதான பிறகு மூக்கு இன்னும் அழகாகி விட்டதே. என்னே அந்த அழகு!

முத்துக்குமார்
Back to Top


பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா