Mail This Page

டாக்டரின் சீடர்களில் ஒருவரான முத்துக்குமார்,
சமீபத்தில் இரண்டாவது முறையாக தனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்நதுகொள்கிறார்.


முத்துக்குமாரின் இரண்டாவது சந்திப்பு.டாக்டரை 24-12-2008 அன்று சந்தித்ததை கேசவன் வீட்டில் அமர்ந்து எழுதிவி்ட்டு வீடு திரும்பினேன். மனம் நிறைய டாக்டர். அன்று பிப்ரவரி 6. அன்றும் தாமரைக்குப் போயிருக்கவேண்டும். வலைத்தளத்தில் டாக்டர் சந்திப்பு இடம் பெற வேண்டும் என்று கேசவன் கேட்டுக் கொண்டதால் அதை முடித்துக்கொடுத்து விட்டு வேகமாக அலுவலகம் போனேன். பெசன்ட் நகர் ராஜாஜி பவன் எதிரில் செல்லும் சாலையில் திரும்பினேன். இன்று நான் சென்றது இரு சக்ர வாகனத்தில். அடடா!! எப்படிச் சொல்வேன்! மீண்டும் டாக்டர்!! நான் திரும்பிய பக்கமே எதிரில் நடை பாதையில் டாக்டர் நடந்து வந்துகொண்டிருந்தார். இன்ப அதிச்சியில் திக்குமுக்காடிப் போனேன். நான் ஒரு நிலைக்கு வரும் முன் அவரைத் தாண்டிச்சென்று விட்டதால், யு டர்ன் எடுத்துத் திரும்பி அவர் அருகே சென்று நிறுத்தினேன். உடனே அவர் திரும்பிப் பார்த்து, நின்று நான் பேசத்தொடங்கும் முன் சிரித்தபடி வேகமாகப் பேசலானார். "வாங்க, வாங்க என்னபேசணும், பேசுங்க", நான் அவசரமாக ஹெல்மெட்டை கழற்றி விட்டு பயபக்தி்யுடன், "நமஸ்காரம் டாக்டர்", என்றேன். அவரும் பதிலுக்கு "நமஸ்காரம்" என்றார்.

அவசரத்தி்ல் வண்டியை என்மேல் சாய்த்தபடி, 'நீங்க தானே டாக்டர் நித்யானந்தம்?' என்று பவ்யமாகக் கேட்டேன். "நான் டாக்டர் நித்யானந்தம் இல்லை. நான் வேறு மனிதன்" என்று ஆங்கிலத்தில் பதி்லளித்தார். அதிர்ந்து போனேன். 'அப்படியா?' என்று நான் கேட்கும் போதே, பயம் என்னைக் கவ்விக் கொண்டது. 'என்னுடைய குரு டாக்டர் நித்யானந்தம் உங்களை மாதிரியே இருப்பார்” என்றேன். அவர் கையை ஆட்டிய படியே மீண்டும், இம்முறை தமிழில், “நீங்க பாக்குற ஆளு நான் இல்ல”, என்றார். ‘அப்போ நீங்க யாரு? உங்க பேரு என்ன? எங்க இருக்கிங்க?’ அன்று அவரைப்போலவே நானும் வேகமாகப் பேசினேன். அதற்கு அவர், “நான் பி்ரசன்ன குமார்” என்று கூலாக பதிலளித்தார். ‘எங்க இருக்கீங்க‘ என்று நான் மறுபடியும் கேட்க, “நான் அஷோக் நகரில் இருக்கேன்”, என்று (casual) பதில் சொன்னார்.

\ நான் டாக்டர் இல்லை என்று அவர் சொன்னதும், பயமும் துக்கமுமாகப் பதறினேன். அடி வயிற்றில் இருந்து அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று குழம்பினேன். எனக்குத்தெரிந்த டாக்டர் தானே எதிரில் நின்றார்!! என் கால்கள் வலுவிழந்தன. கைகள் நடுங்கின. மோட்டார் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு நிமிர்வதற்குள் அவர் பத்தடி சென்றுவிட்டார். இப்போது நடை மிக மிக வேகம்!! சென்றமுறை போல தென்றல் நடை இல்லை.

இந்த முறையும் அதே ச்ஃபாரி தான். இடது கையில் தங்க நிற வாட்ச், பாக்கெட்டில் இரண்டு பேனா, கையில் அந்தக் காலத்து ரெக்ஸின் பை, அதே செருப்பு. மேலும் கீழும் ஒன்றிரண்டு பற்கள் இலலை. (என்னுடன் சிரித்தபடியே அவர் பேசியதால் இது எனக்குத் தெரிந்தது) ஆனால் பேச்சு, குழராமல் எப்போதும் போல தெளிவாக இருந்தது. அவர் நடக்க ஆரம்பித்ததும் நான் மணி பார்த்தேன்., நான்கு. அலுவலகத்தில் பத்து நிமிடங்களில் இருக்க வேண்டும். எந்தப் பக்கம் போவது என்று ஒரு கணம் தடுமாறி பிறகு வண்டியை எடுத்தேன். ஓட்டமுடியவில்லை. பத்துப் பேர் என் முதுகின் மேல் அழுத்தியது போல் ஒரே கனம். ஏதோ மூடிபோட்டு என்னை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாற்போல் உணர்வு. ஏக்கம், வயிற்றிலிருந்து மீண்டும் கிளம்பியது. அழுகையும், ஆற்றாமையும் படபடப்புமாக நான் தலையிலிருந்து கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தேன்.

நண்பர்களிடம் தொலைபேசியில் நடந்ததை விவரித்தேன். பிறகு இரவு வீடு திரும்பியதும் டாக்டரைப் பார்த்ததை மீண்டும் மீண்டும் மனத்தில் ஓட்டிப் பார்த்தேன். இதுவரை யோசிக்காதது இப்போது புலப்பட்டது. அவர் பேசினாரே, அது நம் டாக்டரின் குரலேதான் அல்லவா!! அப்படியிருக்க அவர் ஏன் தான் இல்லை என்றார்?

இப்போது நான் டாக்டரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் சமீபத்தில் பார்த்த முகம் தான் நினைவுக்கு வருகிறது –அந்த அரும்பு மீசை முகம்!
Back to Top

பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா