Mail This Page
அன்பர்களே,

ஆனந்த ஜோதியின் பாடல்கள் கருத்தாழம்கொண்ட இனிமையான பாடல்கள். இவை இசைத்தட்டுகளாகவும் வெளிவந்துள்ளன. டாக்டரின் சீடர்கள் கூடுமிடமெல்லாம் இந்தப் பாடல்களைப் பாடி ஆன்மிக உணர்வில் லயிப்பது வழக்கம். இறைவனை அணுகுவதற்கு இசையைவிட எளிய வழி வேறு இல்லை என்பது என் எண்ணம். இந்தப் பாடல்களைப் படித்து, கேட்டு, பாடி மகிழ உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இங்கே அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். ஆல்பம் பகுதிக்குச் சென்றால் இசையுடன் பாடல்களைக் கேட்கலாம்.

-கேசவன்

ஆனந்த் ஜோதி பாடல்கள்


1. அன்பே அமுதம்

அன்பே அமுதம்
ஆதூரமே தவம்
இன்பம் மனிதம்
ஈறில்லாததுநேயம்                                                                        (அன்பே அமுதம் )

உயிரே ராகம்
ஊதுவதே யாகம்
எதிலும் பொதுவே சங்கதி
ஏதுமில்லாதது நிம்மதி                                                                   (அன்பே அமுதம் )

ஐயம் வேண்டாம்
ஒருநாள் அறிவோம் யாரும்
ஓதுவதே விழியானால்
ஆயுதம் ஏனோ அன்பே!                                                                (அன்பே அமுதம் )

2. அம்மா


அன்பின் மறு பெயர் அம்மா! நெஞ்சின்
ஆருயிர் ஆறுதல் அம்மா!
இன்ப துன்பத்தின் இடை நிலை அம்மா!
ஈந்து மகிழும் இறையே அம்மா!

உண்மையின் முழு உருவே அம்மா!
ஊதி உணர்த்தும் குருவே அம்மா!
எதிலும் நிலைபெறும் இயக்கம் அம்மா!
ஏடுகள் காணாத இலக்கியம் அம்மா!

ஐயம் இல்லாத அமைதி அம்மா!
ஒவ்வொரு சொல்லிலும் உயிரே அம்மா!
ஓங்காரம் என்னும் உணர்வே அம்மா!
அவ்விடம் இவ்விடம் ஆக்கியதம்மா!

ஆயுதம் காணாத அதிசயம் அம்மா!
ஆயுதம் பூணாத அதிசயம் அம்மா!
ஆயுதம் பேணாத அதிசயம் அம்மா!
அம்மா! அம்மா! அம்மா!                                                                (அன்பின் மறுபெயர் அம்மா )

3. அகிலத்தின் ஜோதி


அகிலத்தின் ஜோதி அகத்தியனே!
அகமும் புறமும் நிறைந்தானே! நிறைந்தானே!                                   (அகிலத்தின்)

கும்ப முனி என்றொரு பெயருண்டு!
கோலமயில் வாகனன் துணையுண்டு!
செந்தமிழ் தேன் அவன் பாட்டிலுண்டு!
செஞ்சுடர் தீ அவன் நோக்கிலுண்டு!
செஞ்சுடர் தீ அவன் நோக்கிலுண்டு!                                                (அகிலத்தின்)

பொதிகை மலை அவன் புகழ் பாடும்!
விந்திய மலை அவன் கீழ் வாழும்!
சந்திர சூரியன் அவன் விழிகளன்றோ!
சத்ய தர்மம் அவன் வழிகளன்றோ!                                                  (அகிலத்தின்)

4. அல்லாவைக் கூப்பிட்டால்….


அல்லாவைக் கூப்பிட்டால் – ஏசு ஓடி வந்தான்!
ஏசுவைப் பாடிநின்றேன் – ஈசன் நாடி வந்தான்!
என்ன விந்தையடா! இது மாந்தர்களே!
மண்ணில் நடந்த வேதமடா! – இனி ஓதுங்களே!
பிஸ்மில்லா! ரஹ்மான்! ஹரி! அல்லேலூயா!
ஓம் நமச்சிவாயா! ஓம் நமச்சிவாயா!ஓம் நமச்சிவாயா!

அல்லாவின் மல்லிகை மணக்கின்றதே! – அங்கே
மெய்யுருகி ஏசுவின் மணி ஒலிக்கின்றதே!
அள்ளிப் பருகையிலே – அன்பர்களே!
ஆனந்தம்! ஆனந்தம்! ஈசன் இனிக்கின்றானே!                          (என்ன விந்தை….ஓம்நமச்சிவாயா)

கன்னங்கரிய மேகம் கண்ணன் என்றால்
காணுங்கள் கர்த்தர் அதில் மின்னல் அன்றோ!
பாடுங்கள்! அல்லா அதில் மழையுமன்றோ!
பாடுங்கள்! பாடுங்கள்! தேவன் ஒன்றே!
தேவன் ஒன்றே! தேவன் ஒன்றே!                                           (என்ன விந்தை….ஓம் நமச்சிவாயா)

5. ஆடுகின்றான் ஈசன்


ஆடுகின்றான்! ஈசன்! என்னுள்ளே
ஆனந்தமாய் ஆடுகின்றான்!
கூவுகின்றான்! கூத்தன்! இங்கே
கூடிவாரீர்! ஓடோடி வாரீர்! – என்றே                                              (ஆடுகின்றான்)

தேடித்தேடி காடுமேடு
ஓடி ஓடி வந்தாய் ஏனோ!
கோடி கோடி ஜன்மம் தானே!
வாடி வாடி நின்றாய் வீணே!                                                          (ஆடுகின்றான்)

எட்டு இதழ் மொட்டவிழ்த்தே – ஈசன்!
அட்டதிக்கு பாலருடன்
இட்டமுடன் ஆடுகின்றான்!
அவன் திட்டமுடன் ஆடுகின்றான்!                                                   (ஆடுகின்றான்)

கொட்டு முரசு ஒலிக்க – ஈசன்!
சுட்ட மண்ணை பூசிக் கொண்டு
சட்டமுடன் ஆடுகின்றான்! அவன்
சக்தியுடன் ஆடுகின்றான்!                                                              (ஆடுகின்றான்)

6. ஆனந்த ஜோதி


ஆனந்த ஜோதியே! அற்புதச் சுடரே!
ஆனந்தமே! ப்ரும்மானந்தமே!
ப்ரும்மானந்தமே! நித்யானந்தமே!
ப்ருமானந்தமே! நித்யானந்தமே!                                                     (ஆனந்த ஜோதியே)

அன்னையாய்! அத்தனாய்! அருள்மிகு ஆசானாய்!
அன்பெனும் கடலாய் அவதரித்தாய்!
நித்தியத்தில் எம்மை நெறிவழிப்படுத்தவே!
நிகரிலா கதிவழி எமக்களித்தாய்!                                                    (ஆனந்த ஜோதியே)

அன்னையாய்! அத்தனாய்! அருள்மிகு ஆசானாய்!
அன்பெனும் கடலாய் அவதரித்தாய்!
தன்னிகரில்லாத தனிப்பெரும் சுடரே!
தவித்த எங்களை தடுத்தாட்கொண்ட நிதியே!                                    (ஆனந்த ஜோதியே)

7. ஆனந்தம்! நித்யானந்தம்!


இன்று ஜோதி பிறந்த தினம்!
இன்பம் ஆரம்பமான கணம்!
ஜன்மம் அகலவும் – ஜனனம் தெரியவும்
ஒரு ஜ்வாலை எழுந்த தவம்!
இன்று ஜோதி பிறந்த தினம்!
இன்பம் ஆரம்பமான கணம்!

ஆதார ஸ்ருதியாய் அவனியில் ஒலிக்க
ஆனந்த ஜோதியாய் அவதரித்தான்!
அண்டமே அதிரும் அன்பின் வடிவம்!
அவலத்தை அழித்திடும் ஆனந்த ரூபம்!
சிவமோ என சிலிர்க்க வைக்கும்
சித்தஸ்வரூபம்! நித்யானந்தம் !
ஆனந்தம்! நித்யானந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!

சலனம் கலைந்து சபையினில் சேர்ந்து
தாண்டவம் காட்டிய ஈசனவன்!
தாய்மை போதித்து மகவாய் நம்மிடையே
மகிழ்ந்துறவாடும் மாயனவன்!
கருணைக் கணைதொடுத்து கர்மவினை எடுக்கும்
கர்த்தனவன் நித்யானந்தம்!
ஆனந்தம்! நித்யானந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!

உம்மில் உயிருடன் உயிராய் கலக்க
உருகுகின்றோம் அதில் ஆனந்தம்!
எம்மில் ஏழுலகம் எழுந்திட எழுந்திட்ட
எழுச்சி கண்டோம் அதில் ஆனந்தம்!
அலைமோதும் வேகம் எமை மோதவிட்ட எங்கள்
ஆனந்தமே! உமக்கானந்தம்!
ஆனந்தம்! நித்யனந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!

8. உள்ளத்திலே ஒளி பிறந்ததம்மா!


உள்ளத்திலே ஒளிபிறந்த தம்மா!
உண்மையின் சூழ்ச்சி புரிந்ததம்மா!
கண்ணனின் முகம் கழன்றதம்மா!
கதிரவன் வருகை புரியுதம்மா!                                                         (உள்ளத்திலே)

காற்றினில் போடும் கோலமம்மா!
கண்மூடும் முன்பு ஓடுதம்மா!
சந்திர சூரிய வழியம்மா!
சத்ய தர்மம் இதுவம்மா!
சத்ய தர்மம் இதுவம்மா!                                                                 (உள்ளத்திலே)

கண்ணுக்குப் பின்னே ஒளியுண்டு!
காற்றுக்கும் அங்கே திரையுண்டு!
நாற்றுக்கும் அங்கே நீருண்டு!
நீயறிவாய் அதன் சுகம் கண்டு!
நீயறிவாய் அதன் சுகம் கண்டு!                                                        (உள்ளத்திலே)

கடலுக்கு மேலே அலையுண்டு!
கடலுக்குக் கீழே அமைதியுண்டு!
பாட்டுக்கு ஏற்ப இசையுண்டு!
பாடிடுவாய் நல் ராகம் கொண்டு!                                                    (உள்ளத்திலே)

9. ஏசுவின் நாமம்


ஏசுவின் நாமம் – பேசுவோம் நாளும்
எழுவீரே! அன்பால் கழுவீரே!பாவங்கள் அனைத்தும்!
நம் பாவங்கள் அனைத்தும்!                                                            (ஏசுவின் நாமம்)

உலகத்தின் ஜோதி உதித்து விட்டார்!
உண்மைக் கதிர்களைத் தந்து விட்டார்!
கண்ணின் மணியிலே கலந்து விட்டார்!
காணுங்கள் கர்த்தர் வந்து விட்டார்!
காணுங்கள் கர்த்தர் வந்து விட்டார்!                                                 (ஏசுவின் நாமம்)

கல்லிலும் அவர் கலந்து நின்றார்!
காற்றிலும் அவர் மிதந்து வந்தார்!
சொல்லிலும் அவர் சிரித்து நின்றார்!
சொல்லி விட்டேன் கர்த்தர் வந்து விட்டார்!                                      (ஏசுவின் நாமம்)

ஆபத்தில் நின்றே மனம் அலையாதீர்!
கோபத்தில் நின்றே நிலை குலையாதீர்!
ஆபத்து என்றதும் அவர் வந்து விட்டார்!
ஆனந்த ஜோதியாய் நின்று விட்டார்!                                              (ஏசுவின் நாமம்)

10. ஆனந்த வள்ளல்


கரிய திருமேனி இரு கமல விழிகள்!
கனவுகளை ஊடுருவும் ஒளியின் வடிவம்!
விரிந்த வெளி வானமென பரந்த இதயம்!
விதையில் உயிர் தூங்குவது போல வினயம்!
பரிந்துவரும் காருண்யம் பளிங்கு நேர்மை!
பாதி விழியால் உலகை ஆளும் பார்வை!
திரியில் ஒரு தீபமென வந்த மின்னல்!
சிந்தையில் நுழைந்த– ஆனந்த வள்ளல்!
ஆனந்த வள்ளல் ! ஆனந்த வள்ளல் !

நிறைகுடம் என தலைநிமிர்ந்த பணிவு!
நிறமாற்ற மற்ற வைராக்கிய மனது!
சிறை அகல வைக்கும் அருள் கனிந்த நோக்கு!
சிறிதும் தயங்காத உண்மை வாக்கு!
பிறை நிலவு, பாற்கடல், சிலுவை என்று
பேதமற காட்சிதரும் பெரிய தெய்வம்!
விரைந்து வரும் தாயுள்ளம் கொண்ட அண்ணல்!
மெய்ஞான தீபம் – ஆனந்த வள்ளல்!

துரியமெனச் சொல்லுவது தொலைவில் இல்லை!
தூங்காமல் தூங்குகிற உணர்வின் எல்லை!
மரணம் என்றால் சுவாசத்தொடர்பு கொண்டு
மனமாகி – சக்தியை இழப்ப தென்று
புரிய வைத்தாய் – உயிர் புகுந்த மின்னல்!
புனிதம் நிறைந்த – ஆனந்த வள்ளல்!
ஆனந்த வள்ளல்! ஆனந்த வள்ளல்!

ஒன்றும் அறியாதவன் போல நடிப்பான்!
ஒரு சொல்லிலே மர்மம் பல உடைப்பான்!
நன்று தீதென்று எல்லாம் பேதம் சொல்லி
நம்ப முடியாததாய் வேதம் சொல்லி
மந்தைகளை உருவாக்கும் மதங்கள் எல்லாம்
மறந்துவிடச் செய்வான் இம் மனிதநேயன்!
சொந்த முயற்சிக்கு தோள் கொடுப்பான்!
ஜோதி வடிவான – ஆனந்த வள்ளல்!
ஆனந்த வள்ளல்! ஆனந்த வள்ளல்!

கன்றும் அறியாமலே பால் கொடுக்கும்
கருணையின் அடையாளம் அன்பு வெள்ளம்!
தென்றலைப் போல் நடையும் சிரித்த முகமும்
தெய்வ நிலை ஒன்றையே குறித்த மனதும்
அன்றின் றெனாதபடி தெளிந்த அறிவும்
அங்கிங் கெனாதபடி நிறைந்த விரிவும்
வென்றும் களிக்காத ஞான நெறியும்,
கொண்டிங் குலாவும் - ஆனந்த வள்ளல்!
ஆனந்த வள்ளல்! ஆனந்த வள்ளல்!

11. காணும் இடம் எல்லாம்….


காணும் இடம் எல்லாம் உன் உருவம்
பூணுவதும் உன் புகழ்மாலை ஒன்றே
ஆளும் என் உள் அரசி – அகிலாண்ட நாயகி!
சத்ய சுந்தரியே – ஸ்ரீ மஹாலட்சுமி அரசே

எங்கெங்கும் பரந்து நிறைந்தவளே!
எவர் கண்ணிலும் காணாது நின்றவளே!
பற்றற்ற மனத்தில் மழலையாய் தவழ்பவளே!
சத்ய சுந்தரியே – ஸ்ரீ மகாலட்சுமி அரசே!
கண்ணை இமை மூடி நின்றபோதும்
கணப்பொழுதில் கருத்தில் நுழைந்தவளே!
கார்மேக வண்ணண் மார்பில் தவழ்பவளே!
சத்ய சுந்தரியே – ஸ்ரீ மகாலட்சுமி அரசே!
எண்ணற்ற தபசிகள்! கணக்கற்ற ரிஷிகள்!
கோடானுகோடி சித்தர்கள் கைகூப்பிக்
கொண்டாடும் போது நின்றருளும்
சத்ய சுந்தரியே –ஸ்ரீ மகாலட்சுமி அர்சே!

வந்ததே நீ வானுலகம் உய்ய!
நல்லாசி நல்கிடும் நர்த்தன நாயகி!
நித்தியா நந்தினி! சூக்ஷ்ம சுபகரி!
சத்ய சுந்தரியே –ஸ்ரீ மகாலட்சுமி அரசே!
நம்ஸ்தே! நம்ஸ்தே! ஸ்ரீ மகாலட்சுமி அரசே!

12. தூய மாமரியே!


தூயமா மரியே! துணைவாராயே!
ஆனந்த ஜோதியே! அற்புதச் சுடரே! துய மாமரியே!
சம்சார சாகரத்தில் சாய்ந்து விட்டேன்!
சச்சிதானந்த ரூபிணியே! சஞ்சல நாசினியே!                                    (தூயமா மரியே)

வாதாதி ராஜன் இங்கே வாடுகின்றேன்!
வேதாந்த பொருளே! மெய்ஞான சுடரே!                                          (தூயமா மரியே)

கோடி கோடி ஜன்மம் வீணே வாடி வாடி வந்தேன்!
நாதாந்த பொருளே! நித்யானந்த அருளே!                                        (தூயமா மரியே)

கோடானு கோடி ஒளிச்சுடரே!
தேனாக வந்தருளும் என் சத்குருவே!                                               (தூயமா மரியே)

தேடாத பொருளே! தேடி வந்தருளும் தேவ தேவே!
வந்தனம்! வந்தனம்! வந்தனம்! அம்மா!                                             (தூயமா மரியே)

13. நிலாவைப் போலே


நிலாவைப் போலே ஒரு நீலமான பிம்பம்
தடாகமானேன் அதில் தங்கமாக மின்னும
நிலாவைப் போலே ஆ…..ஆ…..
புல்லாங்குழல் ஒலி அதில் தள்ளாடும் என்மொழி!
வண்டாடும் மலர் வனத்தின் வாசல் உன் விழி – கண்ணா!
என் தெய்வ நேயமே! என் தெய்வ நேயமே!
என் வேதமே! உன்னால் உயிர்த்ததிந்த உள்ளமே!                              (நிலாவைப்)

ஒரு ஜ்வாலையுள் வைத்தாய்! என்னை உன் பார்வையில் வைத்தாய்!
நில்லாத காற்றையும் ஒரு நீதி சொல்ல வைத்தாய் – கண்ணா!
என் உணர்வில் மென்மையே! என் உணர்வில் மென்மையே!
என் உண்மையே! நீயின்றி என்றுமே நானில்லையே!                          (நிலாவைப்)

14. பங்குனி உத்திரம்


பங்குனி உத்திரம் – பரம பவித்ரம்!
திங்களின் ரூபம் – தெய்வ சுகம்!
அகத்தியன் ஜோதி – ஆதித்ய ஹ்ருதயம்!
ஆனந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!                                                 (பங்குனி)

சின்மய முத்ரம் – சாது-ரக்ஷகம்!
புண்ணிய தீர்த்தம் – நித்யானந்தம்!
ஆனந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!
ஆனந்தம்! ஆனந்தம்! நித்யானந்தம்!                                                 (பங்குனி)

15. குழலூதும் கண்ணனுக்கு


குழலூதும் கண்ணனுக்கு என்ன சொந்தமோ!
நான் என்ன பந்தமோ! – அவன்
நிஜமாகி என்னுடன் நின்றுவிட்டான்!
கண்ணன் நின்றுவிட்டான்!                                                             (குழலூதும்)

அலையாகி நான் அலைந்தபோது – அவன்
கரையாகி என்னை தழுவிக் கொண்டான்!
கண்ணன் தழுவிக் கொண்டான்!                                                      (குழலூதும்)

நிலை என்ன! கலை என்ன! – அவன்
கரைத்து விட்டான்! – என்னை
கரைத்து விட்டான்!                                                                      (குழலூதும்)

விலையில்லா அன்பிலே என்னை
அடைத்து விட்டான்! நிலையான
நிலுவையில் நிறுத்தி விட்டான்                                                       (குழலூதும்)

நிஜம் என்னுள் ஆடுகின்றான்!
நிஜம் என்னுள் ஆடுகின்றான்!
ஆனந்தமாய் ஆடுகின்றான்!
நித்யானந்தமாய் பாடுகின்றான்!                                                     (குழலூதும்)

பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா