காலத் திரையில் களிநடம் செய்யும்
மூலத்(து) இறையை முழுமுத லைஐம்
பூதத் தொருமித் தமரும் பொருளை
வேதத் தொளியை விழைந்திடு நெஞ்சே.
ஆற்றொழுக் கம்போல் அமைதி யளிப்பது
காற்றொழுக் கம்தான் கதியின் நெறியது
வேற்றொழுக் கத்தில் விளையாது பேரின்பம்
காற்றொழுக் கத்தில் கனிய வருவீரே
நேற்றைக் கிருந்தார் நிகழ்த்தினார் என்பதால்
போற்றும் வழக்கம் புறந்தள்ளு வீர்கடவுள்
வீற்றிருக் கின்ற விளக்குக்கு நெய்யாகிக்
காற்றொழுக் கத்தில் கனிய வருவீரே.
கதியே ஒழுக்கம் கதிகலங் கிப்போய்
அதிரத் தலைப்பட்டால் அச்சம் குழப்பம்
விதியின் கணைகள் விரையும் தருணம்
கதியொழுக் கம்தான் கவசம் அளிக்குமே.
புறஒழுக் கம்பெற போதனை தேவை
சரஒழுக் கம்பெறச் சாதகம் தேவை
சரஒழுக் கம்தான் அறஒழுக் கம்பின்
பிறஒழுக் கங்களில் பேதப் படுவீரோ
ஆற்றல் அறத்துக்கே அர்ப்பணிப் பீர்உலகு
தோற்றம் எடுக்கும் தொடர்பறுப் பீர்அகத்தை
ஆற்றுப் படுத்தி அமைவீர் உயிர்மூச்சுக்
காற்றை ஒடுக்கிக் கரைசேரும் நற்கதிக்கே
விடுமூச்(சு)ஒவ் வொன்றும் விளைவிக்கும் நுட்ப
வடிவங்கள் ஐந்துவகை வானாதி பூதப்
படிவங்கள் ஆகுமவை பார்த்துப் பிரித்துப்
படிக்கத் தெரிந்தால் பரிபாஷை யாமே
நெருப்புக்கு நீர்தந் தணைக்கலாம் அன்றி
நெருப்பை வளியால் பெருக்கலாம் உள்ளே
நெருப்பை விதைக்க நிலம்தரலாம் தீயில்
உருவாரம் செய்துவெளி ஊதலாம் அன்றே
நெருப்பை நெருப்பால் நெருக்கிப் பிடித்து
நெருப்பைத் திருப்பி அனுப்பி நெருப்பில்
விருப்பை இழைத்து விடுத்துத் திரும்ப
வருவிப் பதுதான் வசியக் கலையாமே
ஐந்தினால் ஐந்தையாள் கின்றதால் உள்உயிர்த்(து)
ஐந்துமே ஐந்தில் அடங்குமே அம்பலத்(து)
ஐந்தொழில் காரன் அமைத்திடும் பீடங்கள்
ஐந்துமே அட்சரம் ஐந்துமா றாகவே
|
மூச்சை அளப்பீர்உள் மூச்சுக்குள் பூதங்கள்
ஆட்சி நடப்ப(து) அறிவீர் அவையெழுதும்
காட்சியெல் லாம்ஒரு பாழ்வெளியில் பாழிலுரு
மாற்றம் புரிவீர்இம் மண்ணுலகை ஆள்வதற்கே
வெளியும் வெளியே அதிரப் பரவும்
வளியும் வளியைப் பருகி வளரும்
ஒளியும் ஒளிபட்(டு) உலகும் உருகித்
தெளியும் புனலும் சிவமா னவையே
சிவம்ஐந் துமெனைச் சிறைவைத் தனவே
சிவமைந் தனிதைத் தெரிவித் தனனே
சிவமைந் தனிதைத் தெரிவித் ததுமே
சிவம்ஐந் துமுடன் வழிவிட் டனவே
விரியாத வெளி விளையாத ஒளி
திரியாத வளி திடமற்ற நிலம்
கரையாத புனல் எனஐந்து மடல்
குவிகின்ற மலர்முகை குண்டலியே
ஓர்ஐந்(து) அடக்கியின் னோர்ஐந்தை ஆளஉள்
வேரில் கனிந்து விளைவீர் விரைமலர்கள்
ஊரை அழைத்தாலும் உள்ளொடுங்கி உள்ளுயிரின்
வேரில் கனிந்தார்க்(கு) அடிமை வியனுலகே
பொறிகள் புலன்கள்ஐம் பூதங்கள் அற்ற
நெறியில் நிலைப்பீர் நினைவிழப்பீர் அந்த
நெறிநிற் பதற்கே நிலைக்களம் தந்து
பரிந்துரை செய்வது பஞ்சாட் சரமே
கூறுகள் ஓவ்வொன்றும் கூவும் ஒரேகணம்
தாறுமா றாகித் தவிக்கும் முரண்படும்
வேறுவே றான வினைத்துளிக ளின்கூட்டை
ஓரமைப் பாக்கும் ஒழுக்கம் பயில்வீரே
ஒன்று தகிக்கும்இன் னொன்று பசிக்கும்மற்(று)
ஒன்று களிக்கும்வே றொன்று துயருறும்
என்(று)இவை யாவும் லயப்படு மோ - ஒன்றி
நின்று சிவமாய் நிலைக்கும் அனுபவத்தே
ஒன்றில்ஒன்(று) ஊடுருவிச் செல்லும் உயிர்நிலை
நின்றுவா சிக்காமல் நெய்யத் தலைப்பட்டுச்
சென்று பரவிச் சிதறுவதால் என்னபயன்
நின்றுவா சித்து நிலைப்பீர் சிவகதிக்கே
எண்ணத்துக் கேது கதவு வெளிப்படாத
எண்ணதுக் கேது தொலைவு வெளிப்பட்டு
பின்னம் அடைவதொரு பேச்சன்றோ பேச்சின்றி
எண்ணத்(து) இருப்பார்க்(கு) உலகம் ஒருதுளியே
|