நம் சத்குருநாதர், ஆனந்த வள்ளல். மனமடங்கி தூய சித்தாகாசத்தின் அனுபவத்தை சர்வ சாதாரணமாக
நமக்கு வழங்கிய வள்ளல். சோகத்தின் பிடியில் இருப்பவர் கூட அவர் அணுக்கத்தில் ஆனந்தத்தை
நுகரலாம். ஆரவாரத்தின் விளிம்பில் நிற்பவர் கூட அவர் அருகாமையில் அமைதியில் அமையலாம்.
கேள்விகள் அடங்கும். வேள்விகள் அடங்கும். கடினமானவை எல்லாம், சுலபமாகும். பிறவிப் பிணியை
நீக்க வந்த மருத்துவர் நம் குருநாதர்.
எட்டாக் கனியாக
ஏடுகள் சொன்ன விடுதலையை எளிதாக்கிக் கொடுத்தவர். சித்தர் இலக்கியத்தில் பொருள் புரியாத
சொற்களாக இருந்தவற்றையெல்லாம் எளிய அனுபவங்களாக எமக்கு காட்டித்தந்தவர். ‘இதுதான்
தூங்காமல் தூங்கும் சுகம்;
இது தான் ஜோதி தரிசனம்; இது தான் அகக்காட்சி; புனிதஆவி இறங்குதல் இது தான்; சூட்சும
சரீரப் பயணம் இது தான்; இது தான் மனத்தைக் கடந்த நிலை; பிறவிகளின் தொகுப்பான ஆழ்மனத்தைப்
படிப்பதும் இப்படித்தான்; படித்த பின் எதைச் செய்வது, எதை முடிப்பது, எதை எரிப்பது
என்பதை அறிவதும் இப்படித்தான்’ என்று படிப்படியாக நம்மோடு வந்து இறுதியில், நாம் முன்னர்
எப்போதோ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலாகவும் நிற்பவர் நம் சத்குருநாதர்.
எப்படியும்
உன்னைக் கரைத்தேற்றியே தீருவேன் என்று சூளுரைத்து இறங்கி வந்திருப்பவர். மாயையா நிறுத்தும்
என்று ஒரு கை பார்க்க வந்திருப்பவர். வந்திருப்பவர் மன்னர் மன்னன். ரத, கஜ, துரக, பதாகையை
எட்ட நிறுத்திவிட்டுத் தனியாக அன்பை மட்டும் சுமந்து வந்திருப்பவர். அன்பைச் சுமந்து
வந்தாரா? அவரே அன்பல்லவா! எத்தனையோபேர் எத்தனையோ யுகங்களாக நாத்தழும்பேற அவரைப் போற்றியிருந்தாலும்,
அவரைப் பாடப் பாட இப்போது பிறந்தது போலல்லவா இனிக்கிறது மொழி! எம் ஓசையை அடக்கி, திசையை
மாற்றி மெய்யுணர்வில் எமை ஆழ்த்திய அருளாளர் எம் குருநாதர்.
மொழி, மத, ஜாதி பேதம் இங்கில்லை. ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. பொருளிலார்க்கும்
இவ் வுலகு உண்டு, அவ்வுலகும் உண்டு. சத்யமும் தர்மமும் மீண்டும் தழைக்கும் சமயம் இது.
இனி நலிந்தவர் காவலின்றித் தவிக்கமாட்டார். உண்மையின் சாரத்தை உலகத்தார் உணர்ந்தும் கொள்வர்.
அடுத்த பக்கம் போக
இங்கே சொடுக்கவும்
பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா