Mail This Page

ஓம் ஷண்முகா சரணம் சரணார்த்தே.

1986 ஆம் ஆண்டு; நாள், மாதம் நினைவில்லை. மந்தைவெளியில் இருந்த என் இல்லத்தில் எப்பொழுதும்போல் ஒரு கும்பல். டாக்டர் உத்தரவுப்படி அன்று மாலை சுகி சிவத்துக்கு மாத்ருகா மந்திரத்தை டாக்டர் சார்பாக உபதேசம் செய்து விட்டு, இரவு நெடுநேரம் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஒவ்வொருவராக உறங்கி விட்ட பின்னும் நான் உறங்கவில்லை. மனம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. சுமார் பன்னிரண்டு மணியிருக்கும், நள்ளிரவு. என் முணுமுணுப்பின் சத்தம் அதிகரித்து விட்டது போலும். ஏனென்றால், அடுத்த அறையில் படுத்திருந்த சிவம் ‘தூங்க விடுப்பா’ என்று அங்கலாய்த்துக் கொண்டான். விளக்கை அணை என்று சுப்பு கத்தினான். சற்று நேரத்தில் அவனே எழுந்து விளக்கையும் அணத்து விட்டான். என் முணுமுணுப்பின் பரபரப்பு அதிகரித்தது. சத்தமாகச் சொன்னேன்:

“தும்மட்டிக் காயுள்ளே தூவானம் விட்டதனால்
மம்மட்டி யில்மண் மணக்கிறது - கும்மிருட்டில்
கோடிமலர் பூத்திருக்கக் கண்கள் குருடாகி
வாடிச் சிலைத்த மனம்”

அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன், நான் அந்தாதியாக வெண்பாக்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்ததை. அப்பொழுது வந்த 51 வெண்பாக்களே குருவந்தாதி ஒருமுறை இதை அப்படியே பாரதி கலைக் கழகத்தில் படித்தேன். சுமார் 50 கவிஞர்கள் அமைதியாக அமர்ந்து கேட்டனர். படித்து முடித்ததும் கவிஞர் நா.சீ.வ. எழுந்து, ‘கைதட்ட வேண்டாம். அது இந்தக் கவிதையைக் கொச்சைப் படுத்திவிடும். எல்லாரும் எழுந்து நின்று மௌனமாக இந்தக் கவிதையின் நாயகனான குருநாதனை மானசீகமாக வணங்குவோம்’ என்று சொன்னார். அந்த அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று குருவணக்கம் செய்த அந்தக் காட்சியை நான் மறக்கவே முடியாது.
கே. ரவி

ஓடெடுத்து வந்தவனை ஓடாக்கி வைத்துள்ளே
வீடெடுத்து நின்ற விமலனவன் – ஏடெடுத்துப்
பாடென்றான் சிந்தை பரிமளித்தான் என்நெஞ்சக்
காடெல்லாம் பாட்டுக் கனல்.

கனலூதி ஊதிக் கனிவான ஆவி
புனலாக வீழும் பொழுது – மணலாய்
எதிர்கொண் டழைத்தென்னை ஏந்தியவன் மார்பில்
நதியான தென்ன நயம்.

நயம்தான் மனது வசப்பட்டால் நாத
லயம்தான்ஆ னந்த லஹரி – குயவனவன்
மண்ணைச் சுடுவது மண்பானை ஆவதற்கே
எண்ணத்தி லும்நெருப்பை ஏற்று.

ஏற்றுக்கொண் டால்தென்றல் ஏந்திக்கொண் டால்தீபம்
கூற்றைக் குலைக்கும் தவம்மூச்சுக் – காற்றிடைய
ஊற்றெடுக் கின்ற உயிரமுதம் உள்ளுணர்வின
ஆற்றாமைக் கேற்ற அரண்

அரண்மனை வாசல் திறந்த(து) அமைத
சரவிளக் காய்வர வேற்கத் – தருமம
அருகில் அழைக்க அடியெடுத்து வைத்தேன
கருவம் அழித்த கனவு

கனவுகன வென்று கதைசொன்ன தெல்லாம
நினைவுத் திரையில் நிகழ – மனத
சுனையாகக் கண்கள் சுமையாக இன்னும
புனையாத வேடம் புகல்

புகலவனே புன்மையிருள் போயகல வந்த
பகலவனே வட்டப் பரிதி – தகதகக்கும்
வானம் அவனே வளிசுழற்சி யும்,அவனே
ஞானத்துக் கென்ன நடிப்பு.

ஞானத்துக் கென்ன நடிப்பு கறிசுமக்கும்
ஏனத்துக் கேது பசியென்னுள் – மோனம்
குடைய விரிந்தகுடை கள்ளப் புலன்கள்
மிடைந்தபாய் இல்லையிந்த மெய்.

மெய்ஞானம் என்றைக்கு மேவுமிந்த மெய்யுள்ளே
பைந்நாகம் என்று படமெடுக்கும் – தெய்வங்க
ளின்தாகம் என்றைக்குத் தீரும் குருவருளால்
என்புருகிப் போவதென் றோ.

என்றோ உடைந்தகரு மேகத்தின் ஓசையினை
இன்றைக்கும் கேட்க இசைப்பவன் – அன்றைக்கே
கண்டு முடியாத காட்சியெலாம் கண்விளிம்பில்
கொண்டுவந் தானென் குரு.

குருநாதன் அந்தக் குறுமுனியின் பேரன்
அருகோடி வந்த அமரன் – சருகாய்க்
கிடந்தஎனை வெண்ணிலவுக் கீற்றாய் அணிந்தான்
விடமுண்ட கண்டனென வே.

வேய்ங்குழலுக் குள்நான்கு வேதம் உயிர்த்ததென
மேய்கறவைக் கூட்டம் மிரண்டுவர – ஆயர்கோன்
லீலையெல்லாம் உள்ளுணர்வி லேநிகழ வைத்தான்விண்
போலவிரிந் தேன்நானப் போது.

போது மலராகிப் புன்னகைக்கும் வானமிதழ்
மீது பனித்து மெருகூட்டும் – நாதனென்
சிந்தை மலர்வித்துத் தேனமுதம் பெய்துள்ளே
வந்தமர்ந் தானமர வாழ்வு.

வாழ்கையொரு சின்ன வடிகால் புரியாத
போக்கில் அலையும் புலன்களுடன் – யாக்கை
மனமென்று மாயச் சகடம் உருட்டிக்
கனவென்று கண்மலரு மாம்.

ஆம்கனவு தானென் றறிந்துகொண்டேன் ஆனாலும்
நீநான் எனவே நிலைகுலைந்தேன் – நானான
துண்மை உருவின்மை உன்மத்தம் ஆனஉயிர்க்
கண்மையிங் கானந்த மே

ஆனந்தம் என்குரு அன்பு ததும்புமொளி
வானந்தப் பிள்ளை மனமொரு – ஞானத்
திகிரியாய் வந்து திசைகள் அமைத்துப்
பகிர்ந்துகொண்டான் தன்னையென் பால்.

பால்மணக் கும்நெஞ்சு நூல்மணக் கும்சிந்தை
வேல்விடுக் கும்விழிகள் வேதாந்த – ஆலமரம்
கீழமர்ந் தேமௌன கீதை உரைத்தவனா
ஏழைக் கிரங்கிவந் தான்.

வந்ததொரு ஜோதி வளையம் சுடராகி
நின்றதொரு தூய்மை நிலையமதைக் – கண்டவுடன்
வெந்து மடிந்து விழுந்த மனத்துக்குச்
சொந்தங்கள் எங்குண்டு சொல்.

சொல்லூற வைத்துச் சுவைகவிதை ஆக்கியென்
உள்ளூற நிற்கும் அனலூற்றை – மெல்லக்
கிளறிவிட் டான்கிளர்ந்த கீதப் புனலில்
முளறியென வந்தான் முளைத்து

முளைத்த நிலவில் முயல்போல் தெரியும்
வளைந்தமனத் தின்சலன மாயம் – கலைத்துக்
களையெடுக்க வந்தான் கடவுளென நின்றான்
தளையுடைய வைத்த தவம்.