Mail This Page

25/11/2010

டாக்டருடன் எனக்கேற்பட்ட முதல் அனுபவம்.


என் பெயர் சுபிராமணியன். நான் மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா என்கிற நாட்டில் ஒரு அலுவலகத்தில் நிதி நிர்வாக அதிகாரியாக (Group Financial Controller) ஐந்து வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன். இறை அருளால் 2004ம் ஆண்டு என் சொந்த ஊரான வேலூர் அருகே உள்ள பாலமதி என்ற சிறிய கிராமத்தில் சித்தாஸ்ரமத்தில் வாசியோக தீட்சை பெற்றேன். பெற்ற ஆசீர்வாதமான தீட்சையான வாசி யோகத்தை என் பணியின் சுமை காரணமாக சரியாக செய்ய முடியவில்லையோ என்ற குறை என்னை பல வருடங்கள் தொடர்ந்து வாட்டி வந்தது. ஒருநாள் நான் வலைத்தளத்தில் தேடலில் இருந்த போது vasiyoga என விளையாட்டாக டைப் செய்த போது, ஆனந்த வள்ளல் மற்றும் தொடர்பு முகவரி கிடைக்கப் பெற்று சுமார் 2 அல்லது 3 மாதத்துக்கு முன் திரு கேசவன் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் நாம் டாக்டரைக் குறித்து மிக விரிவாக நேர்த்தியாக எனக்கு விளக்கினார். இது நடந்த மறு நாள், எனக்கு ஒரு மிக ஆச்சர்யமான காரியம் நேரிட்டது. அது இயற்கைக்கு மாறானதும் கூட. மிகவும் வியக்க தக்கதானா அந்த அனுபவத்தை ஆனந்த ஜோதி நண்பர்களுடன் நான் பகிர்த்துக்கொள்ள விரும்புகிறேன்.

பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், நான் என் பிளாட்டில் தனியாக இருப்பதால், அருகில் அல்லது சற்று தொலைவில் உள்ள இந்திய நண்பர்கள் வீட்டிற்கு பொழுது போக்கிற்காக செல்வேன். அந்த ஞாயிறும் அவ்வாறே சற்று தொலைவில் உள்ள திரு பாபு என்பவர் வீட்டிற்கு சென்று இருந்தேன். அவர் போர்வெல் மெஷின் வைத்துத் தொழில் செய்வதால், போர் வண்டிகள் அதற்கான உதவி வாகனங்கள் நிற்க வசதியாக, மிகப்பெறிய பங்களாவை வாடகைக்கு எடுத்து அதிலேயே தங்கியுள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒரு இந்தியன் கம்பெனியில் போர் போட ஆர்டர் கிடைத்ததன் பேரில் அதற்கு பூஜை போட திரு பாபு, முருகன் மற்றும் நானும் கிளம்பினோம். காலை 9 மணிக்கு துளை போடும் யந்திரம் மற்றும் அது சார்ந்த மற்ற உபகரணங்கள் எல்லாம் வேலை நடக்கவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டன. வீட்டின் மெயின் டோர் மற்றும் தனியாக உள்ள மனித நுழைவுக் கதவு ஆகியவை இழுத்து பூட்டப்பட்டுவிட்டது. பூஜை முடிய பகல் 12 ஆகிவிட்டது. திரு முருகன் அன்று மாலை 6 மணி விமானத்தில் சென்னை திரும்புகிறார். எனவே அவரை விமான நிலையத்தில் விடும் பொருட்டு, நாங்கள் மூவர் மட்டும் மதியம் வீட்டுக்கு வந்தோம். இவ்விடத்தில் அவ்வீட்டின் கதவு அமைப்பை விளக்குகிறேன். ஆழ்துளை யிடும் யந்திரம் பொருத்திய வண்டி மற்றும் உபகரண வண்டி உள்ளே வந்து, போக மிகப் பெரிய, பிரம்மாண்டமான ஒன்றரை ஆள் உயர இரட்டை கதவு, பாதுகாப்பு கருதி தனியாக ஒரு சுவரிலும், அதை அடுத்து மனித நுழைவு கதவு தனியாக ஒரு சுவரிலும் இருக்கும். இந்த இரண்டு கதவுகளும் 5 அடி இடைவெளியில் தனித்தனியாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கும். நல்ல உடல் நிலையில் உள்ளவர் என்றாலும், இரட்டை கதவில் ஒரு கதவை மிகவும் சிறமப்பட்டுத்தான் திறக்க முடியும். அவ்வளவு கனமானவை.

நாங்கள் வீடு வந்த போது, ஏனோ அந்த ஆள் நுழையும் கதவு பூட்டு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது. திரு பாபு மிகவும் முயன்று அந்த பூட்டைத் திறந்தார். இரட்டைக்கதவு மிகவும் பாதுகாப்பாக காலை முதலே பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்று, திரு முருகன் பொருட்களுடன் விமான நிலையம் சென்று எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, நான், திரு பாபு, மற்றும் அந்த கம்பெனியின் மேனேஜர், உள்ளூர் வேலையாள் (அவன் அந்த வீட்டில் மூன்று ஆண்டுகளாக தங்கியிருப்பவன்) ஆக நாங்கள் மூவரும் சுமார் 4 மணியளவில் வீடு வந்தோம்.

மீண்டும் மனித நுழைவு கதவு பூட்டு மிகவும் சிரமத்தைக் கொடுத்தது. திரு பாபு, பலமுறை முயன்று, சோர்ந்துபோய், என்னிடம் கொடுத்துவிட்டு காரில் அமர்ந்துவிட்டார். நானும் பூட்டை திறக்க முயன்று சோர்ந்து போன நேரத்தில் மனதில் திடீரென டாக்டர் ஞாபகம் வந்தது. டாக்டர் எவ்வளவு நேரம் சிறமப்படுவது, சற்று உதவக்கூடாதா என மனதில் நினைத்தேன். அச்சமயம், நாங்கள் போராடிக்கொண்டிருந்த சின்ன கதவுக்குச் சம்மந்தமில்லாத நன்கு சாத்தப்பட்டு, உறுதியாக மூடப்பட்டிருந்த மிகக் கனமான, பெரிய இரட்டைக்கதவு உள்புறமிருந்து யாரோ ஒருவர் உலுக்குவது போன்ற, மிக பெரிய ‘டம டம’ சப்தத்துடன் கதவு ஆடத் துவங்கியது. உள்ளூர் வேலையாள் (மேனேஜர்) மிகவும் பயந்து, (Subra, what is this?) “சுப்ரா, என்ன இது?” என என்னைப்பார்த்துக் கேட்ட அதே சமயத்தில் உள்புறமாக நன்கு தாளிட்டு, பூட்டப்பட்ட இரட்டைக் கதவு ‘டமார்’ என்ற சப்தத்துடன் இருவர் உள்ளே நுழையும் அளவுக்கு தானாகவே திறந்துகொண்டது. உடனே உள்ளூர் ஆள் திபு திபு என வீட்டுக்குள் ஓடினான். வீட்டின் பின்புற கதவு, மற்றும் பக்கவாட்டு கதவுகளை எட்டி உதைத்து பார்த்துவிட்டு வீட்டைச் சுற்றி ஓடிவந்து (Subra, somebody opens the door), “சுப்ரா, யாரோ கதவைத் திறந்திருக்கிரார்கள். ஆனால் யாரையும் காணோமே!”. என திரும்பத் திரும்ப ஆச்சரியப்பட்டு சொன்னான்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அந்த கதவை, மிக மிக கனமான அந்த கதவை மிகச் சுலபமாகத் திறந்தது டாக்டர் தான் என நான் உணர்ந்ததும், மனதிற்குள் நன்றி சொன்னேன். நான் சிறிய கதவை திறக்க வேண்டினேன், அவரோ பெரிய கதவை திறந்தார்.

பரம்பொருளான அவரை மிக சமீபமாகவே நான் தெரிந்து கொண்டாலும், அவர் என் ஆன்மாவோடே கலந்தவர் என புரிந்து கொண்டேன். என் ஆன்மாவையே அவருக்குச் சரணாகதி ஆக்கி விட்டு, நீயே என் ஜீவன், என் ஆன்மா என மிக மகிழ்சியோடே உள்ளேன்.

இவ்வுலகம் என்னும் பெரும் கடலில், டாக்டர் என்ற கட்டுமரத்தில் என் பயணம் தொடர்கிறது. கட்டுமரத்தின் நல்ல மாலுமியாக டாக்டரே உள்ளார். சோதனை என்னும் புயல் வந்தாலும், டாக்டரே நல்ல நங்கூரமாக உள்ளார். நான் (என் உள் இருக்கும் ஜீவன் (அ)ஆத்மாவாகிய டாக்டர்) நேற்றும், இன்றும், என்றும் அசைக்கப்படுவதில்லை.

எத்தனை பிறவி எடுத்தாலுமோ, (அ) பிறவியே இல்லாமல் போனாலோ, டாக்டரே என் ஆத்ம ஜீவன்.

நன்றி!

அன்பன்

சுப்பிரமணியன்.