ஆனந்த வள்ளல்
ANANDA JOTHI
OURGURU
முதல் பக்கம்
ஆனந்தவள்ளல்
வாய்ஸ்
குரு
அனுபவங்கள்
பாடல்கள்
பாடல்கள்2
ஆல்பம்
வீடியோ
Mail This Page
தேடலில் துவங்கி….விடியலை நோக்கி…
தேடலில் துவங்கி, விடியலை நோக்கிச் செல்லும் இந்த வாழ்க்கையில் பெறப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைவது தான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கம். மானுடப் பிறவி கிடைப்பதென்பது மிக அரிது. அப்படிக் கிடைத்தால், அதன் நோக்கமே தேடலைத் தொடர்வதற்காகத்தான். தேடல்கள் பல. தேடல்களிலேயே மிக உயர்ந்தது ஆன்மிகத் தேடல் தான். இதுவரை விடை காண முடியாத பல கேள்விகளுக்கு விடை காணும் நோக்கத்தில் துவங்கியது தான் தேடல். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், துவங்கிய இடத்தை அடைவது தான் இந்தத் தேடலின்விடியல். தப் பிறவியில், சிந்திக்கத் தெரிந்த நாள் முதல், இதுவரை பலரால் விடை காணமுடியாத மிகப்பழைய கேள்விகளுக்கு விடை காணத் துணிந்து ஆரம்பித்த பயணம் தான் என் தேடல். இன்று என் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா என்றால், ஆம், இல்லை என்ற எதிர்மறை பதில்களைத்தான் சொல்ல வேண்டும். பதில்களின் மொத்த உருவமாக என் குருநாதன் வந்த பிறகு, இப்போதென்ன அவசரம் பதில்களைத் தெரிந்து கொள்ள? கேள்விகளும் இருக்கட்டும்,பதில்களும் இருக்கட்டும். அவகாசம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவு வேலை மீதமிருக்கின்றது....இன்னும் எத்தனை ஆன்மாக்கள் கரை ஏற துடிக்கின்றன.....அவற்றின் கூக்குரலைக் கேட்டுத்தானே குருநாதன் கீழிறங்கி வந்தான். அந்தக் குரல்களில் என் குரலும் ஒன்றல்லவா? அப்படிப்பட்டவர்களை கரை ஏற்றிவிடும் அரிய பணியைச் செய்து கொண்டிருக்கும் குருநாதனுக்கு மிகச் சிறிய அளவிலாவது உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் வேரூன்றியிருப்பதால் என் கேள்விகளுக்கான பதில்களுக்கு அவசரமில்லை என எண்ணுகிறேன். 1994 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்தித்தேன். அதே மாதம் 24 ம் தேதி தீட்சை பெற்றேன். அன்று மீண்டும் பிறந்தேன். இந்தத் தொடரின் வாயிலாக எப்படியிருந்த நான் எப்படி மாற்றப் பட்டேன், அந்த மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் கூறுவது மட்டுமல்லாது, காலத்தின் கட்டாயத்தால் எங்களைப் பிரிந்து வாழும் குருவைத்தேடி நாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களையும் விவரிப்பது தான் என் நோக்கம். இந்தத் தொடரில், டாக்டர் நிகழ்த்திய பல அற்புதங்களைப் பற்றி எழுதவிருக்கிறேன். ஆனால், அவர் நிகழ்த்திய அற்புதங்களிலெல்லாம் மிகப் பெரிய அற்புதம் என்னுள், மற்றும் அவருடைய சீடர்கள் அனைவருக்குள்ளும் அவர் நிகழ்த்திய மாற்றம் தான் என்பதை இங்கே அவசியம் சொல்ல வேண்டும்.
இந்த தொடரை நான் ஏற்கனவே எழுதி வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி யில் வெளிவந்த ஒரு கட்டுரையுடன் தொடங்குகிறேன். இதைப் படியுங்கள். சிறு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்து எழுதுவேன்
ஆண்டு, ஜனவரி மாதம் 31ம் நாள். இருள் விலகாத நேரம். சுமார் 4.30 மணி அளவில்,இரண்டுகார்களில் ஒன்பது பேர் குறடுமலை நோக்கிப் பயணமானோம்.பெங்களூர் நெடுஞ்சாலையை சுமார் 70 கி.மீ. வேகத்தில் விழுங்கிக்கொண்டு இரண்டு கார்களும் விரைந்துகொண்டிருந்தன. வெளியில் படர்ந்திருந்த இருள் எங்கள் மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. ஆதவன் வந்தால் வெளியிருள் விலகும். டாக்டர் வந்தால் எங்கள் மன இருள் விலகும். குருநாதனின் திருமுகத்தைக் காணும் நாளை எண்ணி மனம் ஏங்கியது.
நினைத்தால் பார்த்துவிடமுடியும் என்று இருந்த போது நாளை பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போட்டதும் இந்த மனம்தான். அவர் யாரென்று நான் அறியாத போது உடனிருந்தார். தெரிந்தபோது பிரிந்துவிட்டார். கண்களை மூடி இருக்கையில் சரிந்தபோது, மனம் கடந்த கால நினைவுகளில் தோய்ந்தது.
1995 ம் ஆண்டு ஜூலை 3ம் நாள் எங்கள் குருநாதனின் திருமேனியைத் தாங்கிய பெட்டியை சவக்குழிக்குள் இறக்கிவிட்டு பாறைபோல் கனத்த இதயத்துடனும், ஆற்றாதழுத கண்ணீருடனும் வீடு திரும்பிய போது, 'என் குருவுக்கும் மரணமுண்டா? நடந்தது உண்மை தானா? இது பிரமையல்லவே! இறைவன் தானே சத்குருவாகவும் வருகிறான்; அவ்வாறாயின் இறைவனுக்கும் மரணமுண்டா? இது எப்படி சாத்தியம்' எனப் பல விடை கிடைக்காத கேள்விகள் மனதை ஆக்கிரமிக்க, பதில் தேட விழைந்த போது, டாக்டரின் சீடர்களில் ஒருவரான ஷோபனாரவி உண்மையின் ஒரு பொறியை என் இதயத்தில் விதைத்து அதை ஊதி... ஊதி, கனிந்து....கனன்று எழவைத்து, அந்த உண்மைத் தீயில் என் கேள்விகளையெல்லாம் எரித்துவிட்டார். மெள்ள மெள்ள மொட்டு இதழ் விரிவது போல என் குழம்பியிருந்த மனத்தில் தெளிவு என்னும் நீரூற்று மெள்ளக் கசிந்து, பெரும் வெள்ளமாய் பெருகியது. என் குருநாதன் என்னைத் தனியே தவிக்க விட்டுப் போனானே என்ற எண்ணம் நீங்கி, குழப்பம் தீர்ந்த மனத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக நீண்ட கரத்தில் என் கரத்தைப் பதித்தேன். இனி அன்னையவள் வழி நடத்துவாள் என்ற நம்பிக்கையுடன், அவள் காட்டும் பாதையில் கேள்விகள் தீர்ந்த நிலையில் என் பயணம் தொடர்கிறது.
நம் குருநாதனுக்கு மரணமேது? 'உலகில் அதர்மம் அதிகரிக்கும் போது, நல்லவர்களைக் காத்து, துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு, யுகங்கள் தோறும் வருவேன்' என்று கூறிய கண்ணனுக்கு மரணமேது? 'நான் மீண்டும் வருவேன்; தீயவர்களை அழித்து, நல்லவர்கள் பொருட்டு பரலோக சாம்ராஜியத்தை இங்கே நிறுவுவேன்' என்று கூறிய நித்திய ஜீவர் ஏசுபிரானுக்கு மரணமேது? நம் குருநாதர் இன்றும் அதே உடலுடன்தான் ஜீவிக்கிறார். அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக நடை போடும் இந்த உலகைக் காக்கும் பொருட்டு அவர் நடத்தும் ஒரு பெரிய நாடகத்தின் ஒரு பகுதி தான் இது. அவர் கருவாசம் செய்து உடலெடுத்துப் புவியில் இறங்கியதும், நம்மையெல்லாம் ஒன்று சேர்த்ததும், இன்று ஸ்கூட்டர் விபத்தில் தவறிவிட்டவர் போல் ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டு மறைந்து வாழ்வதும், அவர் நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதி தான். நாடகத்தின் முடிவில் உண்மை விளங்கும். உலகறிய மீண்டும் டாக்டர் நித்யானந்தமாகவே வெளிவந்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, நம்மையெல்லாம் பிறவித் தளையினின்று விடுவித்து, வானுலகம் அழைத்துச் செல்வது உண்மையில் நடக்கப் போகின்றது. எனவே, நம்பிக்கையுடன் வாருங்கள் நம் குருநாதனைத் தேடுவோம் என அழைத்தார். சாதாரண மனிதர்களின் பார்வையில் இது சித்தசுவாதீனமிழந்தவர்களின் பேச்சாகத் தோன்றும். அசாதாரணமான குரு! அவர் சீடன் என்பதால், நானும் சாதாரணமானவன் இல்லை.
குருவின் அருளால், இங்கொன்றும் அங்கொன்றுமாக, அவர் விட்டுச் சென்ற ஆதாரங்களையும், பேச்சுவாக்கில் சொன்ன சொற்களையும், செய்திகளையும், குறிப்புகளையும் கொண்டு கிடைத்த ஊகத்தின் படி, முதலில் அந்தர் கங்காவில் (கோலாருக்கு அருகில் இருக்கிறது) தேடக் கிளம்பினோம். அங்கே இருக்கும் ஒரு காட்டிலாக்கா அதிகாரி (Forest Ranger) கிருஷ்ணப்பா என்று பெயர், டாக்டர் மூன்று நாட்கள் அங்கு தங்கிச் சென்றதாகக் கூறினார். டாக்டரின் புகைப் படத்தைக் காட்டிக் கேட்டபோது, சந்தேகத்துக்கிடமில்லாமல், 'இவர் தான்' என்று சொன்னார். அன்று தொடங்கி, காடு, மலை, திருத்தலங்கள், மஹான்களின் சமாதிகள், டாக்டர் பிறந்த இடம், வளர்ந்த இடம், எனப் பல இடங்களில் எங்கள் தேடுதல் யக்ஞம் தொடர்ந்தது. அவற்றில் டாக்டரை நேரில் கண்டதாக உறுதியாகச் சொன்னவர்களின் அனுபவங்களில் சிலவற்றை மட்டும் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அனைத்து அனுபவங்களும் இந்தத் தொடரில் வரும். பொறுமை காத்தால் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
தேடுதல் யக்ஞத்தின் இரண்டாம் முயற்சியாக, கம்பம், தேனிக்கு அருகிலிருக்கும் சுருளியாறு என்னும் நீர்வீழ்ச்சியிருக்கும் காட்டுப்பகுதியில் எங்கள் தேடல் தொடர்ந்தது. காய், கனி, திராட்சை, வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புக்கள் நிறைந்த அந்த அழகிய சூழலில், அருவியின் அருகே தேடிய போது, அங்கு வசிக்கும் வாலிபர் அர்சுனன் என்பவரிடம் டாக்டர் போட்டோவைக்காட்டி, 'சமீபத்தில் இவரை இங்கே யாராவது பார்த்திருக்கிறீர்களா' எனக் கேட்டோம். எங்கள் நம்பிக்கைக்கு உரமிடும் வகையில், சற்றும் தயங்காமல், “பார்த்திருக்கிறேன்” என்ற பதில் வந்தது. மேலும் பேசுகையில், “இவருடன் மற்றொருவரும் வந்தார், அவர் சிவந்த நிறத்தில், குள்ளமாக, காவியுடையணிந்து, ஜடாமுடியுடனும், தொப்பையுடனும் இருந்தார். இந்தப் புகைப்படத்தில் இருப்பவர், ஒல்லியாக, உயரமாக, வேட்டிச் சட்டை அணிந்து, தோளில் ஜோல்னா பை மாட்டியிருந்தார். இருவரும் மேலே காட்டுப் பகுதிக்குச் சென்றார்கள். கையில் உணவு ஏதும் எடுத்துச் செல்லவில்லை” என்று சொன்னார். இது கழிந்து, ஒரு வாரத்திற்குப் பிறகு, அர்சுனன் காட்டுக்கு வேட்டைக்குப் போன போது இவர்கள் இருவரையும் அடர்ந்த வனப்பகுதியில், ஒரு நீரோடைக்கு அருகில் பார்த்தாராம். குள்ளமாக இருந்தவர் நீரோடையில் நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தாராம். டாக்டர் சற்று மேலே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாராம். குள்ளமாக இருந்தவர், அர்ஜுனனையும் அவர் நண்பரையும் நலம் விசாரித்தாராம். அதற்குப் பிறகு இருவரையும் மீண்டும் பார்க்கவே இல்லையாம். டாக்டரின் புகைப்படத்தைக் காட்டி, உயரமாக இருந்தவர் இவர் தான் என உறுதியாக சொன்னார். இது சத்தியத்துக்குக் கிடைத்த இரண்டாம் சாட்சி.
இதற்கடுத்து, நண்பர் அனந்துவும் நானும், புத்தூருக்கு அடுத்த, திருப்பதி செல்லும் பாதைக்கருகே இருக்கும், ‘சதாசிவக் கோனே’ எனும் மலையிலிருக்கும் கோவிலுக்குச் சென்றோம். ஓரளவு அடர்ந்த காட்டிடையே சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து, கோவிலை அடைந்த போது, அங்கே தங்கி தவம் இயற்றும் இரு சன்யாசிகளை சந்தித்தோம். அங்கே ஒரு மஹானின் சமாதி இருக்கிறது. அழகிய நீர்வீழ்ச்சிக்கருகில் அன்னை பராசக்திக்கு ஒரு அழகிய கோவில். மிக ரம்யமான சூழல். அங்கிருந்து அரை பர்லாங் தூரத்தில் மற்றுமொரு சிவன் கோவிலும் நீர் வீழ்ச்சியும் இருக்கிறது. பராசக்தியின் கோவிலுக்கருகில் குடில் அமைத்து தவமியற்றும்அந்த இரு சன்யாசிகளிடம் டாக்டரின் புகைப்படத்தைக் காட்டி, 'இவரைப் பார்த்திருக்கிறீர்களா?' என வினவினோம். “இவர் இங்கே வந்திருந்தாரே, ஒரு நாள் மதியம் சமாதிக்கருகில் தியானத்திலிருந்த இவரை அழைத்து உணவு பறிமாறி உபசரித்தோம்” என்றார். ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் பழக்கம் உள்ள இவர்கள், மதிய உணவுக்கு முன், யாராவது வந்திருக்கிறார்களா எனப் பார்த்து, அவர்களுக்கு உணவு அளித்து, அதன் பின் உணவருந்தும் பழக்கம் உள்ளவர்களாம். எங்களிடம் இருந்த புகைப்படத்திலிருந்த டாக்டரைப் பார்த்து, “இங்கே வந்திருந்தது இவர் தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்றார்.
இதே கால கட்டத்தில், டாக்டரின் சிஷ்யை, மைதிலி என்று பெயர், அவர் ஒரு நாள் நர்சிங்ஹோமில் அவர் கணவரைக் காணச் சென்ற போது, லிஃப்டில் டாக்டரும், அவருடன் வெள்ளையுடை அணிந்திருந்த ஒரு பெண் கையில் ஒரு புத்தகத்துடன் ( பார்ப்பதற்கு பைபிள் போல் இருந்தது என்பது இவர் ஊகம்) நிற்பதைக் கண்டு ஆச்சரியத்தில் வாயடைத்து நிற்கையில், லிஃப்ட் தளத்தில் வந்து நின்று கதவு திறந்து கொண்டதாம். தன்னை ஒரு வழியாகச் சுதாரித்துக் கொண்டு, டாக்டருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு, கணவர் அறையில் இருக்கும் தன் பெண்ணை அழைத்து வந்து டாக்டரைக் காட்ட எண்ணி, மகளை அழைத்து வருவதற்குள் டாக்டர் அந்த வராண்டாவில் (corridor) சென்று மறு முனையில் திரும்பினாராம். ஓடிச் சென்று பார்த்தால், டாக்டரையும் அந்த மாதையும் காணோமாம். தான் டாக்டரைப் பார்த்தது மனித உடலில் தான். மனக்கண்ணில் தோன்றும் அஹக்காட்சி (VISION) அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறார். இதை இவர் மகள் ஷோபியும் பார்த்திருக்கிறார். இவை அனைத்தும் 1996 ல் நிகழ்ந்தவை. விபத்துக்கு முந்தைய வருடங்களில் பல முறை, பல சந்தர்ப்பங்களில், தான் 1996 ல் வெளி வருவேன் என டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்த சொல் உண்மையானதற்கு மேற்கூறிய நிகழ்வுகளை ஆதாரமாகக் கொள்ளலாம்.
இது தவிர, கிளினிக்கில் இருந்த போது ஒரு நாள் டாக்டர், இரு கைகளையும் உயரத் தூக்கிக் கொண்டு, “31 ஜனவரி, 1997 ல் நான்
‘
FREE BIRD
’
(நான் சுதந்திரப் பறவை)” எனச் சொல்லியிருக்கிறார். இப்படி டாக்டர் சொன்னதை அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதை சொல்கிறார் போலும் என எண்ணிவிட்டார்கள். ஆனால் அவர் சொன்னதன் பொருள் இப்போதல்லவா புரிகிறது! என் மனம் நிகழ் காலத்துக்குத் திரும்பியது. அவர் ‘நான் சுதந்திரப் பறவை’ என்று சொன்ன ஜனவரி 31 ம் நாள் இன்றுதான் என்று உணர்ந்த போது அந்த ஞானப் பறவையைத் தரிசிக்கும் பாக்கியம் இன்றாவது கிட்டுமா என மனம் ஏக்கத்தில் மூழ்கியது. அன்று மேற்கொண்ட பயணத்திற்கு மற்றும் ஓர் காரணமும் இருந்தது. 1983 ம் ஆண்டு, குறடு மலையிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய குன்றை சுட்டிக்காட்டி, 'இந்த இடத்துக்கு ஜீசஸ் வருவார்' என டாக்டர் கூறியதை திருமதி ஷோபனா நினைவு கூர்ந்தார்கள். அந்த மலையின் மேல் ஒரு சிலுவை இருந்ததாம். அந்த மலையையும், சிலுவையையும் பார்த்துவிட்டு, குறடு மலை, அந்தர் கங்கா, மாரிக்குப்பம் சிவன் கோயில், திருமலையிலிருக்கும் ஆகாச கங்கா தீர்த்தம் என ஒரு பெரிய டூர் ப்ரோகிராமுடன் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் இவ் வேளையில், டாக்டரைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது. சித்தூரைத் தாண்டியதும் எங்கள் அனைவரின் கண்களும் சாலையின் இரு மருங்கிலும் உள்ள சிறு குன்றுகளை அலசிக்கொண்டு வந்தன. தேடிய குன்றும், சிலுவையும் கண்ணில் பட்டன. பெரிய சிலுவை, சாலையின் அருகேயுள்ள குன்றின் உச்சியில்! காரை நிறுத்திவிட்டு மேலேறிச் சென்றோம். அங்கே நிறுவப்பட்டிருந்த சிலுவையின் பீடத்தில் 1939 எனப் பொறிக்கப் பெற்றிருந்தது. அருகில் ஒரு சிறிய மண்டபம். அதில் அமர்ந்து தியானம் செய்தோம். அங்கிருந்து பார்த்தால், குன்றின் மறு பக்கத்தில் சிறு கிராமம். அதில் ஒரு தேவாலயம். அந்த கிராமத்திற்குச் செல்ல குன்றைச் சுற்றி ஒரு மண் பாதை சென்றது. அந்தத் தேவாலயத்தை திறக்கச் செய்து, உள்ளே சென்று தியானம் செய்தோம். அங்கே விசாரித்ததில் கிடைத்த ஒரு அரிய செய்தி.
அந்த மலை மீது நிறுவப்பட்டிருக்கும் சிலுவையானது, 1939 ம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த ஒருவர், தன் மனக்கண்ணால் (அகக் காட்சி) பார்த்து, இந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்து இந்த சிலுவையை நிறுவினாராம். இந்த குன்றிற்கு ஈஸ்டர் ஹில் என்று பெயர். இதில் நாம் நினைவு கூரத்தக்க முக்கியமான செய்தி என்னவென்றால், டாக்டர் பிறந்த ஆண்டும் 1939 தான். என்ன ஒற்றுமை!
அந்த இடத்தை விட்டகலும் போது, தாயைப் பிரியும் சேயைப் போல கனத்த மனதுடன் பயணத்தைத் தொட்ர்ந்தோம். தேவனின் பாதம் பதிந்த இடம். அவன் பாதம் போன பாதை தெரியாமல் மனம் தவித்தது. குறடு மலை கோவிலை அடைந்தோம். அங்கு நான்கு யுகங்களாக மோனத்தவத்தில் வீற்றிருக்கும் தும்பிக்கையாழ்வாரை தரிசித்துவிட்டு, அந்தர் கங்காவுக்குப் புறப்பட்டோம்.
அந்தர் கங்காவில் மதிய உணவருந்தியப் பின் அங்கிருந்து கோலாருக்கருகிலிருக்கும் மாரிக்குப்பம் நோக்கிப் பயணமானோம். மாரிக்குப்பம் சிவாலயத்தில் சிறிது நேரம் தியானம் செய்து சிவசக்தியின் அன்பில் நனைந்த பின் அருகிலிருக்கும் ஒரு விஷ்ணு விக்ரகத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்தச் சிலையின் பின்னே ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. டாக்டர் கோலாரிலிருந்த சமயம், தன் துணைவியாருடன் இந்த சிவாலயத்துக்கு வந்த போது, வெண்ணிற புஷ்பத்தை சிவனுக்கு சார்த்தக்கூடாது என்பதைக் கேட்டு, கையிலிருந்த வெண் மலர்களை வீசி எறிந்தாராம். அம் மலர்கள் விழுந்த இடத்தில், அவை தானே அசைவதைக் கண்ட டாக்டர், அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அவ்விடத்தைத் தோண்டச் செய்தாராம். மண்ணுக்கடியில் இவ் விக்ரகம் இருக்கக் கண்டு, அதை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்தாராம். இபோது அதைச் சுற்றி கருங்கல் பலகைகளால் சுவரும் கூரையும் வேயப்பட்டுள்ளது. பூசை நடப்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன. நட்டக் கல் பேசுமோ என்னவோ! ஆனால் கூத்தன் அருகிலிருந்தால், தரையில் விழுந்த மலர்களும் கூத்தாடும் என்பது புரிந்தது.
இருட்டிய நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, இரவு குறடு மலை வந்தடைந்தோம். இரவு, கோவில் பிரகாரத்தில் தங்கினோம். இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. இதை அவசியம் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்.
இரவுச் சாப்பாடுக்கு, நாங்கள் கொண்டுவந்திருந்த உணவு ப் பண்டங்களில், கொஞ்சம் சப்பாத்தியும், கொஞ்சம் தயிர் சாதமும், சிறிது புளியோதரையும் மிச்சமிருந்தது. தயிர் சாதப் பாத்திரத்தைத் திறந்ததும் அதுவும் புளியோதரையுடன் போட்டியிடுவதை நாசி உணர்த்தியதும் திருமதி ஷோபனா ஒரு கரண்டியை எடுத்தார்கள். புளியாய் மாறிவிட்டிருந்த அந்தத் தயிர் சாதத்தில் விட்டு ஒரு கலக்குக் கலக்கினார்கள்; பிறகு அதிலிருந்து எல்லோருக்கும் ஒரு கரண்டி சாதம் இலையில் இட்டார்கள். நான் புளிப்பு, காரம், உப்பு அனைத்தும் மிகக் குறைவாக சாப்பிடும் பழக்கமுள்ளவன். என் இலையிலும் ஒரு கரண்டி சாதம் விழுந்தது. தயக்கத்துடனேயே சிறிதளவு எடுத்து வாயிலிட்ட நான், ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஸ்தம்பித்துவிட்டேன். புளிப்பு அறவே இல்லை. தயிர் சாதம் அப்படி ஒரு ருசி! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என ஒரு வாக்கியம் உண்டு. இந்த அனுபவம் தந்த இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மீண்டும் மகிழ்கிறேன்.
மறு நாள் புறப்பட்டு, சித்தூர் வழியாக திருப்பதி சென்று, சீனிவாசமங்கா புரத்திலிருக்கும் பெருமாளை தரிசித்துவிட்டு, மேலே சென்று ஆகாச கங்கா, பாப வினாசனம் தீர்த்தங்களைப் பார்த்துவிட்டு, இரவு சுமார் பத்து மணி அளவில் வீடு திரும்பினோம்.
அன்று அந்த பயணம் மீண்டும் ஒரு முறை டாக்டரைக் காணாத ஏக்கத்தில் முடிவுற்றது.
அதன் பின் சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் திருமதி ஷோபனா விடமிருந்து போன் கால் வந்தது. சந்தோஷ அதிர்ச்சியைத் தரும் மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொன்னார்கள். திருமதி நந்தினி சத்யமூர்த்தி என்பவர், அவர் கணவர் திரு ரவி அவர்களின் சகோதரி, நம் டாக்டரை, புரசைவாக்கத்தில் 31.01.1997 மதியம் 1.45 மணி அளவில் ஹோட்டல் சரவண பவன் அருகில் நின்று கொண்டிருந்ததை மிகத் தெளிவாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் திருமதி நந்தினி பற்றி ஒரு குறிப்பு மிக அவசியமாகிறது. டாக்டர் எனச் சொல்லக்கேட்டாலே உருகிப்போகும் நம்மிடையே, திருமதி நந்தினி அவர்கள் டாக்டரிடம் அவ்வளவு ஈடுபாடில்லாதவர். மனத்தளவில் அவரை ஒரு குருவாக ஏற்றுக் கொண்டவரில்லை. அவரை,வருவார் என எதிர்பார்த்திருப்பவரும் இல்லை.
இப்படிப்பட்ட மன நிலையுள்ள ஒருவர் முன், விபத்தில் சிக்கி உயிர் இழந்துவிட்டவர், அரசுப் பொது மருத்துவ மனையில் post mortem செய்யப்பட்டு, 'இறந்து விட்டார்' எனச் சான்றிதழ் அளிக்கப்பெற்று, முறைப்படி சடங்குகளை செய்து, அடக்கம் செய்யப்பட்டவர்,(செய்தித்தாள்களில் அவர் மறைவு பற்றிய செய்திகள் வெளிவந்தன) அதே டாக்டர் தன் முன் ரத்தமும், சதையுமாக, பட்டப்பகலில் வந்து நின்றால், அவர் நிலை எப்படி இருந்திருக்கும்?! ஓரிரு வினாடிகளில் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சாலையின் மறு பக்கம் நின்று கொண்டிருந்த அவரை நோக்கி விரைந்தார். சாலையைக் கடக்கும் முயற்சியில், குறுக்கே வந்த வாகனங்களால் கவனம் சற்றுச் சிதறுண்டு, ஒருவாறு அவர் நின்றிருந்த இடத்தை அடைந்த போது, அங்கே டாக்டரை காணவில்லை. கூட்டத்தில் எப்படி மறைந்தாரோ! நந்தினிக்கு இப்படி அவர் காட்சி தந்தது, முன்பு ஒரு முறை, “நான் சுதந்திரப்பறவை” என்று குறிப்பிட்ட அதே 31.01.1997 ம் நாள். நாங்கள் மேலே விவரிக்கப்பட்ட பயணத்தைத் தொடங்கிய நாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அதே புரசைவாக்கத்தில், செங்கல் சூளை ரோடில், புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் வாயிலில், அம்பேத்கர் சிலை அருகில் டாக்டர் நின்றிருந்ததை நந்தினி அவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார்கள். இம்முறை அவர்கள் காரில் சென்று கொண்டிருந்ததால், காரை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்ப்பதற்குள் அவர் அங்கில்லை. இவரே டாக்டரை இரண்டு முறை பார்த்துவிட்டார் ஒரு மாத இடை வெளிக்குள்.
இதைத் தொடர்ந்து, ஜானகிராமனின் மகன் ஸ்ரீராம், தன் வீட்டிற்கு வரும் போது, யாரோ தன்னைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற உணர்வால் உந்தப்பட்டு, திரும்பிப் பார்த்த போது, டாக்டர் T.V.S.50 வாகனத்தில் இவரைத் தாண்டி சென்று மறைந்து விட்டாராம். பார்த்த இடம்; அண்ணா நகர், ஜானகிராமன் வீட்டருகில்.
இதற்குப் பிறகு தேடல் தீவிரப் படுத்தப்பட்டு, பல சாட்சியங்கள் கிடைத்தன. புரசைவாக்கத்திருக்கும் ‘டானா’ தெருவிலுள்ள ஒரு சிறு டீக் கடையில் டாக்டர், காலையில் பூரியும், இட்லியும் பார்சல் வாங்கிப் போனதைக் கேள்விப்பட்டு, நாங்கள் போய்க் காத்திருந்தோம். அன்றும், அதன் பிறகும் டாக்டர் அங்கு வரவில்லை. ஆனால் பால் வினியோகம் செய்யும் கடைக்காரர் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த பகுதியில் வாழும் இளைஞர்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள மடத்தில் வசிக்கும் சாது ஒருவர் டாக்டரை,அந்தக்காலக் கட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறார். புவனேஸ்வரி சினிமாவுக்கெதிரில் இருக்கும் கடையில் வேலை செய்யும் சுமார் பத்து வயது சிறுவன் ஒருவன், நாய்க் கடிக்கு வைத்தியம் பார்க்க சென்ற இடத்தில், இந்த டாக்டர் தான் தன்னை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்லும்படி சொன்னதாக உறுதியாகக் கூறுகிறான். ஆனால் அவன் சொன்ன கிளினிக்கில் பார்த்த போது, அங்கே வேறொரு டாக்டர் இருந்தார். இந்த மாயவனின் விளையாட்டை யாரால் புரிந்து கொள்ள முடியும்!
ஈஸ்டர் ஹில்லை நோக்கி அன்று பயணித்ததற்குப் பிறகு, பல இரவுகள்......பல விடியல்கள். ஆனால் எங்கள் தேடல் பயணம் தொடர்கிறது........என் வாழ்வில் விடியலுக்காக இன்னும் காத்திருக்கிறேன். மேலே நீங்கள் படித்தது, நான் 1996 ல் சில, பல அனுபவங்களுக்குப் பிறகு Voice of Anandajothi இதழில் எழுதி மூன்று பகுதிகளாக வெளி வந்த தொடர்.. அதில் சில திருத்தங்களுடன் மேலே கொடுத்துள்ளேன். அத்துடன் முடிந்துவிடவில்லை எங்கள் தேடல். பயணங்கள் தொடர்ந்தன. சுமார் இரண்டாண்டு காலம் எங்கள் தேடல் பயணங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி வெளி மானிலங்களிலும் தொடர்ந்தன. உள்ளும் புறமும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகள், வழிகாட்டுதல்களின் துணையுடன் தேடல்கள் தொடர்ந்தன. எல்லாப் பயணங்களும் எங்களைப் பொருத்தமட்டில், டாக்டரை நேருக்கு நேர் பார்க்க முடியாமலே முடிந்தன. ஆனால் பார்த்தவர்களின் சான்றுகள் மலை போல் குவிந்தன. இந்தப் பயணங்களால் எங்களுக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவப் பொக்கிஷங்கள் ஏராளம்............... ஏராளம்.
இந்தத் தொடர் தொடரும். எல்லா அன்பர்களும் 'வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி' யின் எல்லா இதழ்களையும் படிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது சாத்தியமில்லை. எனவே, மேலே உள்ள கட்டுரையை ஆரம்பமாகக் கொண்டு, தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதவுள்ளேன். நான் மட்டுமல்லாது, இந்த தேடல்களில் பங்கு பெற்ற மற்ற சகோதர சகோதரிகளும் எழுதுவார்கள் என எதிர் பார்க்கிறேன்.
இன்னும் வரும்.........
Back to Top
கேசவன
பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா