Mail This Page

விடியலைத்தேடி .....2



அன்று துவங்கிய தேடலின் தொடர்ச்சியை கால அடவணைபபடி தருவதை விட மிகத் தெளிவாக மனத்தில் நிற்பதை முதலாகக் கொண்டு எழுதலாம் என முடிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.

இது நடந்தது 1997ம் ஆண்டு என்று நினைவு. சென்னையிலிருந்து சித்தூர் வழியாக பங்களூர் செல்லும் பாதையில், கிருஷ்ணராஜபுரம் என்னும் ஊர் உள்ளது. இது பங்களுருக்கு அருகில் இருக்கிறது. இந்த நெடுஞ்சாலயை ஒட்டி இரயில் நிலயமும் அமைந்துள்ளது. எங்கள் தேடலின் போது இவ்விடத்தில் நாங்கள் சந்தித்த ஒருவர், டாக்டரை இந்த இரயில் நிலையத்தில் சந்தித்ததாகச் சொன்னார். சொன்னது மட்டுமல்லாது அவர் தந்த விவரங்கள், டாக்டரின் புகைப்படத்தைப் பார்த்து உறுதியாக அடையாளம் காட்டியது போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு, அவ்வூரில் பல இடங்களில் பல பேரிடம் என் விசாரணையைத் தொடங்கினேன். பெரும்பாலோரிடமிருந்து கிடைத்த விவரங்கள் மிகவும் நம்பி்கையூட்டுவதாக அமைந்தது. டாக்ட ரின் புகைப்படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர், இவரைத்தான் பார்த்தோம் எனக் கூறியது மனதுக்கு மிகவும் தெம்பூட்டுவதாக இருந்தது. என் தேடலை விரிவு படுத்தினேன். ஆதாரங்கள் கிடைத்தன ஆனால் அவரை மட்டும் காணவில்லை.

எல்லா இடங்களிலும் தேடிவிட்டு, மாலை சுமார் ஐந்து மணி அளவில் கிருஷ்ணராஜபுரம் இரயில் நிலையத்தில் வந்து அமர்ந்தேன். மனம் வெறுமையாக, உடல் சோர்வாக, கண்கள் தூரத்தில் லயிக்க இரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்தேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சென்னைக்குத் திரும்பிச் செல்வதைத்தவிர வேறென்ன செய்வது.. இயலாமை மனதை வாட்ட, வெற்றுப் பார்வை இரயில் நிலைய நடை மேடை முடியும் இடத்தில் எதையும் உள் வாங்காமல் நிலைத்திருந்தது. வெற்றுப் பார்வையில் ஏதோ ஒரு சலனம். மனம் விழித்துக்கொண்டது. பார்வை கூர்மையானது. தூரத்தில் ஒல்லியாக, உயரமாக, கையில் குடையுடன், வெள்ளை வேட்டி, சட்டையுடன், தென்றலைப்போல் அசைந்து ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த நடையை இந்த ஜென்மத்தில் நான் மறக்க முடியுமா. ரவி எழுதிய பாடல் என நினைக்கிறேன்- அதில் வரும் ஒரு வரி – 'தென்றலைப்போல் நடையும்' – என்று வரும். அவர் நடப்பதைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் அந்த வர்ணனை அவர் நடைக்கு எத்தனைப் பொருத்தம் என்று. உள்ளம் விழித்துக் கொண்டது. தூரத்தில் வருபவரைக் கூர்ந்து கவனித்தேன். அந்த நடை, உயரம், உடல் பருமன் இவை அனைத்தும் டாக்டரைப் பிரதி பலித்தன. அவர் நெருங்கி வர, வர உள்ளுணர்வைப் பின்னுக்குத் தள்ளி மனம் வேலை செய்ய ஆரம்பித்தது. அவரை, கண், மூக்கு, காது, விரல்கள் எனத் தனித்தனியாகப் பார்த்து டாக்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. ஓவ்வொரு உறுப்பாகப் பார்த்தால், அவை அனைத்தும் டாக்டருடன் ஒத்துப் போயின. ஆனால் மொத்தமாகப் பார்த்தால், இவர் வேறு நபர் என்ற எண்ணம் தோன்றுகிறது. மனமும், மாயையும் தங்கள் சதிச் செயலில் இறங்கி விட்டதை நான் அப்போது உணர வில்லை. அவர் என்னருகில் வந்து நின்றார். அவரிடம்,' நீங்கள் என் குரு டாக்டர் நித்யானந்தம் தானே? 'என்று வினவியிருக்க வேண்டும். ஆனால் நான் எப்படி அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. அவரும் என்னுடன் இரு புதியவர்கள் சந்தித்தால் எப்படி உரையாடுவோமோ அப்படிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்று வினவினேன்."எனக்குப் பூர்விகம் திருச்சி. ஆனால் இந்த ஊரிலிருக்கும் அரசாங்கத் தொலை பேசிப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன்" என்று சொன்னார். தான் ஒரு கிருத்துவன் என்றார். "ஜீசஸ் மீண்டும் வருவார். வரும் நேரம் மிக நெருக்கத்தில் உள்ளது" என்று சொன்னார். இஸ்ரேலில் அப்போது பிரதமராக இருந்தவர் மாறி வேறு ஒருவர் (பெயர் சொன்னார் மறந்துவிட்டேன்) பிரதமராக வரும் வேளையில் ஜீஸஸ் வந்துவிடுவார் என்றுரைத்தார். அகத்திய முனிவரின் பாடல் ஒன்றைக் கூறி அதற்கான பொருளையும் சொன்னார்- அந்தப் பாடலும் மறந்துவிட்டது – அந்த நேரத்தில் என் மனதில் ஓடிய எண்ணம், -'ஒரு கிருத்துவர் எப்படி அகத்திய முனிவரின் பாடல்களிலும் அதன் ஆழ்ந்த பொருட் செறிவிலும் பாண்டித்யம் பெற்றார்' என்பதுதான்.

வெகு காலத்திற்குப் பிறகு, இப்போது அந்தச் சம்பவத்தை எண்ணிப் பார்க்கையில் அவர் மனத்தில் என்ன எண்ணம் ஒடிக்கொண்டிருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. ஏறக்குறைய இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வு தான். சிறு குழந்தை சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் போது, தாய் தன் குழந்தையிடம் சொல்வாள்- "பார், அந்தக் காக்கா உன் சாப்பாட்டை கேட்கிறது. நீ சாப்பிடவில்லையென்றால் அது சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். பாப்பா பட்டினி கிடக்கணும். நீ சாப்பிட்டுவிடு செல்லம்" என்று. தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். தாயின் நோக்கம் தன் குழந்தையை முட்டாளாக்குவதல்ல. ஆனாலும் தான் சொல்லும் பொய்யை நம்பி குழந்தை சாப்பிட்டுவிடும் என்பதால் அப்படிச் சொல்கிறாள். குழந்தை, தான் சொல்வதை நம்பிக் கண்களை அகல விரித்துக் கொண்டு, அவசரம் அவசரமாக உணவு உண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருப்பாள் தாய். அன்று நானும் வளர்ந்த குழந்தையாக அவர் முன்னே நின்று கொண்டிருந்தேன். அவரும், நான் மாயையில் மயங்கி நிற்பதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்திருப்பார். கன்றும் அறியாமல் பால் கொடுக்கும் கருணைத் தாயல்லவா இந்த ஆனந்த வள்ளல். தன் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் கொஞ்ச நேரம் என் நிலையைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டிருந்திருப்பார் எனப் புரிகிறது. அந்தச சிறு சந்தோஷத்தை அவருக்குக் கொடுக்கமுடிந்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்று என் ஆணவத்தை (ego) விட்டு, அந்த இடத்திலேயே அவர் கால்களைப் பற்றிக்கொண்டிருந்தால், ஒரு வேளை தன்னை என்னிடத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பாரோ எனற எண்ணம் என் மனத்தில் தோன்றுகிறது. அதற்கும் அவர் அனுமதி வேண்டும். அவர் விருப்பமில்லாமல் யாரால் என்ன செய்ய இயலும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார் என்று நினைவு. நேரமாக ஆக நான் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டேனோ என்ற எண்ணம் மேலோங்கி நினறது. காலம் கடந்த பின் என்ன யோசித்து என்ன பயன். ஒரு முறை டாக்டர் சொன்னது நினைவு வந்தது. நான் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேரில் வந்து பார்பேன் என்று சொன்னார். என்னளவில் அது நடந்து விடடது என்று தோன்றியது.

ஓவ்வொரு முறையும் டாக்டரைத் தேடி நாங்கள் செல்லும் பயண முடிவில் ஏற்படும் ஏமாற்றமும், மனச் சோர்வும் என்னை ஆட்கொண்டன. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனச் சொல்வார்கள். அந்தச் சொல் வழக்கு நினைவுக்கு வந்தது.

இந்தப் பயணத்தில் நான் தனியாகத்தான் சென்றிருந்தேன். ஒவ்வொரு முறையும் பயணத்தைத் துவங்கும் போதும், இம்முறையாவது டாக்டரைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏககத்துடனும், எதிர்பார்ப்புடனும் துவங்குவோம். இப்பயணமும் அப்படித்தான் துவங்கியது. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனால் அவர் டாக்டர் தான் என்ற எண்ணமும், அந்த அருகாமை தந்த உணர்வும் மற்றுமொரு பயணத்தை மேற்கொள்ள ஆதாரமாக அமைகிறது என்பது தான் உண்மை.

அவர் வருவார் என்ற நம்பிக்கையையும் அதற்கான ஆதாரங்களையும் எங்கள் மனதில் விதைத்ததும், வளர்த்ததும் அவர் தானே. படைத்தவன் இருக்கிறான்,பார்த்துக்கொள்வான் எனறு பயணத்தைத் தொடர்கிறோம்
Back to Top

மீண்டும் தொடர்வேன்.......

பிஸ்மில்லா ரஹ்மான் ஹரி ஹல்லேலூயா ஓம் நமச்சிவாயா